‘விராட் கோலியை வெறுக்கிறோம்; அவரது பேட்டிங்கை ரசிக்கிறோம்’ ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் சொல்கிறார்


‘விராட் கோலியை வெறுக்கிறோம்; அவரது பேட்டிங்கை ரசிக்கிறோம்’ ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் சொல்கிறார்
x
தினத்தந்தி 15 Nov 2020 9:04 PM GMT (Updated: 15 Nov 2020 9:04 PM GMT)

இந்திய கேப்டன் விராட் கோலியை வெறுப்பதாகவும், அவரது பேட்டிங்கை ரசிப்பதாகவும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

சிட்னி, 

3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி சிட்னியில் நடக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது.

சிட்னியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் பயிற்சியை தொடங்கியுள்ளனர். நேற்று வலைப்பயிற்சியின் போது தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆவேசமாக பந்து வீசி அசத்தினார். அவரது பயிற்சி வீடியோவை கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

டிம் பெய்ன் பேட்டி

இதற்கிடையே, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் இந்த தொடர் குறித்தும், இந்திய கேப்டன் கோலி குறித்தும் சுவாரஸ்யமான பேட்டி அளித்துள்ளனர். டிம் பெய்ன் கூறியதாவது:-

விராட் கோலி குறித்து என்னிடம் நிறைய கேள்வி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை அவரும் மற்றொரு வீரர் தான். மற்றபடி அவரைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவருடன் எனக்கு நட்புறவு கிடையாது. ‘டாஸ்’ போடும் போது அவரை பார்க்கிறேன். அதன் பிறகு அவருக்கு எதிராக விளையாடுகிறேன். அவ்வளவு தான்.விராட் கோலி குறித்து ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவரை நாங்கள் வெறுக்க விரும்புகிறோம். அதே சமயம் கிரிக்கெட் ரசிகர்களாக அவரது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறோம். இந்த மாதிரி இருவிதமான எண்ணங்கள் எங்களிடம் (ஆஸ்திரேலிய மக்கள்) உண்டு. அவரது பேட்டிங்கை பார்க்க பிடிக்கும் என்றாலும், அவர் அதிகமான ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்புவதில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டித் தொடர் ஆக்ரோஷமும், பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும். அதிலும் விராட் கோலி கடும் சவால் அளிக்கக்கூடிய ஒரு வீரர். நானும் அப்படி தான். சில நேரங்களில் நாங்கள் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டிருக்கிறோம். அவரும் கேப்டன், நானும் கேப்டன் என்பதால் மட்டும் இது நடக்கவில்லை. வீரராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும்.

பதற்றம் இருக்கும்

விராட் கோலி போன்ற உலகின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் பதற்றம் இருக்கும். அவரை வீழ்த்த எல்லாவகையிலும் போராட்டம் தீவிரமாகும். இதே போல் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் களத்தில் நிற்கும் போதும் இத்தகைய டென்ஷன் இருக்கும்.

இது மிகப்பெரிய தொடர் என்பதால் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். கடந்த முறை இந்திய அணி இங்கு (ஆஸ்திரேலியா) எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. ஆனால் அப்போது இருந்த ஆஸ்திரேலிய அணி வேறு. எந்த நேரத்திலும், சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் போது தான் உங்களது முழு திறமையை சோதித்து பார்க்க முடியும். அதை ஒரு வீராகவும், அணியாகவும் செய்யும் ஆவலில் உள்ளோம்.

இவ்வாறு டிம் பெய்ன் கூறினார்.

Next Story