வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2020 9:52 PM GMT (Updated: 17 Nov 2020 9:52 PM GMT)

கொல்கத்தாவில் பூஜையில் கலந்து கொண்டதாக சர்ச்சை: வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.

டாக்கா, 

வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்த போது காளிபூஜையில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பேஸ்புக் நேரலை பக்கத்தில் கையில் பெரிய கத்தியுடன் ஷகிப் அல்-ஹசனுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தார். ஷகிப் அல்-ஹசனின் நடவடிக்கை தங்களது மத உணர்வை புண்படுத்துவதாக ஆவேசப்பட்டார். தகவல் அறிந்த டாக்கா போலீசார் அல்-ஹசனுக்கு மிரட்டல் விடுத்த 28 வயதான மொசின் தலுக்தர் என்பவரை நேற்று கைது செய்தனர்.

இதற்கிடையே தன்னிலை விளக்கம் அளித்த ஷகிப் அல்-ஹசன், ‘காளி பூஜையை தொடங்கி வைக்க நான் கொல்கத்தா செல்லவில்லை. கொல்கத்தா மேயர் தான் அதை தொடங்கி வைத்தார். அழைப்பிதழை பார்த்தால் நான் சிறப்பு அழைப்பாளர் கூட கிடையாது என்பது புரியும். அதன் அருகில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் திரும்பும் போது மக்கள் கூட்டத்தால் சில நிமிடங்கள் நிறுத்த வேண்டியதானது. அப்போது பூஜையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். எனது செயல் தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்

Next Story