‘சென்னை அணியில் இருந்து டோனியை விடுவிக்க வேண்டும்’ முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை


‘சென்னை அணியில் இருந்து டோனியை விடுவிக்க வேண்டும்’ முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை
x
தினத்தந்தி 17 Nov 2020 9:59 PM GMT (Updated: 17 Nov 2020 9:59 PM GMT)

‘ஐ.பி.எல். ஏலத்திற்கு முன்பாக சென்னை அணியில் இருந்து டோனியை விடுவித்தால் அந்த அணிக்கு நல்லது’ என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா யோசனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

சமீபத்தில் நடந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. 6 வெற்றி, 8 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் 39 வயதான டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் வீடியோ பதிவு ஒன்றில் பேசும் போது கூறியதாவது:-

அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக மெகா ஏலம் நடந்தால் சென்னை அணி நிர்வாகம் டோனியை உடனடியாக விடுவித்து விட வேண்டும். ஏனெனில் இந்த ஏலத்தில் எடுக்கும் வீரர்களை வைத்து தான் அடுத்த 3 ஆண்டுகள் விளையாட வேண்டி இருக்கும். டோனி தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆடுவாரா? என்பதில் உறுதி இல்லை.

ரூ.15 கோடி வீணாகும்?

அதற்காக சென்னை அணியில் டோனியை வைக்கவேண்டாம் என்று சொல்லமாட்டேன். அடுத்த ஐ.பி.எல். போட்டியில் டோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால் நீங்கள் அவரை தக்கவைத்துக்கொண்டால் அவருக்கு ரூ.15 கோடி ஊதியமாக வழங்க வேண்டும். அவர் 3 ஆண்டுகள் அணியில் நீடிக்காமல் அடுத்த ஒரு சீசனோடு ஓய்வுபெறும் பட்சத்தில், அவருக்குரிய ரூ.15 கோடி அணி நிர்வாகம் கையில் இருப்பாக வந்து விடும். பிறகு 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு அதே தொகை மதிப்பிலான வேறு வீரரை தேர்வு செய்தாக வேண்டும். அந்த தொகைக்கு யாரை அணி நிர்வாகம் தேர்வு செய்யும்.

மெகா ஏலத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் கையில் அதிக தொகை இருப்பு இருந்தால், பெரிய அணியை உருவாக்க முடியும். ஏலத்திற்கு முன்பாக டோனியை விடுவித்து விட்டு, ஏலத்தின் போது அவரை ‘மேட்ச்கார்டு’ சலுகை மூலம் சென்னை அணிக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதால் தொகை மிச்சமாகும். இது தான் அணி நிர்வாகத்துக்கும் நல்லது.

ரெய்னா-ஹர்பஜன்

சென்னை அணிக்கு இப்போது மெகா ஏலம் அவசியமாகும். அந்த அணியில் நிறைய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. இப்போதுள்ள அணியை முழுமையாக மாற்ற விரும்பினால் அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ்சை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த சீசனில் கடைசி நேரத்தில் விலகிய சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரை சென்னை அணி நிர்வாகம் மீண்டும் ஏலத்தில் எடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறினார்.

Next Story