கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா + "||" + India slipped to 2nd position in Test Championship points table due to ICC's new practice

ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா

ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா
ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
துபாய், 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.

ஒரு தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். 2 போட்டி கொண்ட தொடர் என்றால் டெஸ்ட் வெற்றிக்கு 60 புள்ளியும், டிராவுக்கு 20 புள்ளியும் வழங்கப்படுகிறது. 3 போட்டி அடங்கிய தொடர் என்றால் வெற்றிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும். இதுவே 5 போட்டி கொண்ட தொடர் என்றால் டெஸ்ட் வெற்றிக்கு 24 புள்ளியும், டிராவுக்கு 8 புள்ளியும் அளிக்கப்படும்.

சரியாக சென்று கொண்டிருந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கொரோனா பரவல் சீர்குலைத்து விட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட பல தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன. என்றாலும் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் திட்டமிட்டப்படி இறுதிப்போட்டியை நடத்துவதில் ஐ.சி.சி. உறுதியாக இருக்கிறது.

சதவீதமாக...

முதலில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கொரோனா அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து ஆலோசித்த ஐ.சி.சி. புள்ளிநடைமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளது.

இதன்படி எத்தனை புள்ளிகளை குவித்தாலும் அதை சதவீதமாக கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே டாப்-2 அணிகள் தீர்மானிக்கப்படும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது.

இந்திய அணி இதுவரை 4 தொடர்களில் விளையாடி 360 புள்ளிகள் சேர்த்து முதலிடம் வகித்தது. ஆனால் புள்ளிகளை சதவீதம் அடிப்படையில் பார்க்கும் போது இந்திய அணி ஒரு இடம் பின்தங்க வேண்டியதாகி விட்டது. 4 தொடர்களில் இந்திய அணி அனைத்து டெஸ்டிலும் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் 480 புள்ளிகளுடன் 100 சதவீதத்தை எட்டியிருக்கும். ஆனால் 360 புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதன் மூலம் இதன் சதவீதம் 75 ஆக உள்ளது.

296 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி சதவீதம் அடிப்படையில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 3 தொடர்களில் விளையாடி 296 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் புள்ளி சதவீதம் 82.22 ஆகும்.

இந்திய அணிக்கு சிக்கல்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு இன்னும் 2 தொடர்கள் எஞ்சியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்டுகளிலும் (வெற்றிக்கு 30 புள்ளி, டிராவுக்கு 12 புள்ளி கிடைக்கும்), ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டுகளிலும் விளையாட உள்ளது. இதில் ஆஸ்திரேலிய தொடரில் சாதித்தால் தான் டாப்-2 இடத்துக்குள் நிலையாக பயணிக்க முடியும். ஆஸ்திரேலிய மண்ணில் தோல்விகளை சந்தித்து இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்றாலும் சதவீதம் 70-க்கு கீழ் குறைந்து போய் விடும்.

அதே சமயம் புதிய விதிமுறையால் நியூசிலாந்து அணி முதல் 2 இடத்திற்குள் நுழைய வாய்ப்பு உருவாகியுள்ளது. உள்நாட்டில் வலிமைமிக்க அணியாக திகழும் நியூசிலாந்து உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு தொடரிலும் நியூசிலாந்து முழுமையாக வாகை சூடினால் 240 புள்ளிகளை பெறும். இதன் மூலம் புள்ளி சதவீதம் 70 ஆக உயரும். எனவே இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிகளை குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இறுதிப்போட்டி வாய்ப்பு

ஐ.சி.சி. பொது மேலாளர் ஜெப் அலார்டிஸ் கூறுகையில், ‘புள்ளி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றம் நிறைய அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அடுத்த மாதம் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு மிகவும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறோம். அனேகமாக ஜூன் மாதம் நடக்கும் இறுதிப்போட்டிக்குள் நுழைய 4-6 அணிகள் இடையே கடும் போட்டி இருக்கும்’ என்றார். குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையாத தொடர்களை ‘டிரா’வாக கணக்கிட்டு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளம் தயாரிப்பு?
இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
2. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’ டொமினிக் திம்மை வீழ்த்தினார்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
3. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
4. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடாலை வீழ்த்தினார் டொமினிக் திம்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 2-வது வெற்றியை பெற்றார்.
5. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க ஆட்டங்களில் நடால், ஜோகோவிச் வெற்றி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபெல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தங்களது தொடக்க லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.