‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து


‘ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ - கவுதம் கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 28 Nov 2020 9:09 PM GMT (Updated: 28 Nov 2020 9:09 PM GMT)

ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் பந்து வீசவில்லை. ஐ.பி.எல். தொடரிலும் ஒரு பந்து கூட வீசவில்லை. தான் பந்து வீசுவதற்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், சரியான நேரம் வரும் போது பவுலிங் செய்வேன் என்றும் கூறினார். இதனால் 6-வது பந்து வீச்சாளர் மற்றும் பகுதிநேர பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திண்டாடுகிறது.

இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணி சரிசம கலவையில் (ஆடும் லெவன் அணி) இல்லாமல் தடுமாறுகிறது. கடந்த உலககோப்பை போட்டியில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் 6-வது பந்துவீச்சு வாய்ப்புக்கு யார் இருக்கிறார்? விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வரிசையில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு 5-வது அல்லது 6-வது பேட்டிங் வரிசையில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது சந்தேகம்தான். இதே போல் அவரால் 7-8 ஓவர்கள் நேர்த்தியாக வீச முடியுமா? இதுவும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

ரோகித் சர்மா அணிக்கு திரும்பினாலும் கூட இது போன்ற சிக்கலை சரி செய்ய முடியாது. டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவதற்கு யாரும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இந்த பிரச்சினை இல்லை. ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் கைகொடுக்கிறார்கள். இந்திய அணியின் பார்வையில், ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் அந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என்பதே எனது கேள்வி’ என்றார்.

Next Story