20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்


20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
x
தினத்தந்தி 4 Dec 2020 12:21 AM GMT (Updated: 4 Dec 2020 12:21 AM GMT)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கான்பெர்ரா, 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அரங்கேறுகிறது.

ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த இந்திய அணி கான்பெர்ராவில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த வெற்றி இந்தியாவின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது.

ஒரு நாள் தொடரில் இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட் கோலி 2 அரைசதங்கள் விளாசினர். ஆனால் பந்து வீச்சு பெரிய அளவில் இல்லை. கடைசி ஒரு நாள் போட்டியில் ‘யார்க்கர் மன்னன்’ தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனின் வருகை பந்துவீச்சை வலுப்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்க்கர் போடுவதில் வல்லவராக திகழ்ந்த நடராஜன் சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு திட்டமிட்டு அணியை தயார்படுத்துவதற்கும் இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் டேவிட் வார்னர் ஏற்கனவே விலகி விட்டார். கடைசி ஒரு நாள் போட்டியில் ஆரோன் பிஞ்சுடன் தொடக்க வீரராக இறங்கிய லபுஸ்சேன் சோபிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் பிஞ்சுடன், மேத்யூ வேட் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது. பிஞ்ச், மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித் ஆகியோர் தான் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் தூண்களாக உள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் இந்திய பவுலர்களின் பாடு திண்டாட்டம் தான். இவர்களை களத்தை விட்டு சீக்கிரம் விரட்டுவதை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்நாட்டு பூர்வகுடி மக்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய நிறத்திலான சீருடை அணிந்து களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.

கான்பெர்ரா ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது. இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் அங்கம் வகிப்பதால் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பு இங்கு கடந்த ஆண்டு நடந்த ஒரே 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா 9 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 3-ம் நிலையில் இருக்கும் அணியான இந்தியாவை வீழ்த்தினால் மறுபடியும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறும். இந்திய அணி தொடரை முழுமையாக வசப்படுத்தினால் 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். மொத்தத்தில் ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 8-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, தீபக் சாஹர், டி.நடராஜன், யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேத்யூ வேட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மோசஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, சீன் அப்போட், ஹேசில்வுட், ஆண்ட்ரூ டை அல்லது மிட்செல் ஸ்டார்க்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story