கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம் கோலி அரைசதம் அடித்தார் + "||" + Against Australia Day-night test Indian team calm game The kholi scored a fifty

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம் கோலி அரைசதம் அடித்தார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம் கோலி அரைசதம் அடித்தார்
அடிலெய்டில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் நிதானமாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி அரைசதம் அடித்தார்.
அடிலெய்டு, 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பிடித்தார். இவர் ஆஸ்திரேலியாவின் 459-வது டெஸ்ட் வீரர் ஆவார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க்கின் 2-வது பந்திலேயே பிரித்வி ஷா (0) போல்டு ஆகி அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் புஜாரா இறங்கினார்.

அகர்வால்-புஜாரா ஜோடி நிதானத்தை கடைபிடித்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு மூவர் கூட்டணி ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் சரியான அளவில் துல்லியமாக தாக்குதல் தொடுத்தனர். பிங்க் பந்தின் வேகமும், ஸ்விங்கும் இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தது. 10-வது ஓவரில் தான் முதல் பவுண்டரியே வந்தது. புஜாரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். லெக் ஸ்லிப்பில் 2 முறை மயிரிழையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். சுழற்பந்து வீச்சாளார் நாதன் லயனின் பந்தும் எகிறி திரும்பியதால் ரன் எடுக்கவே சிரமப்பட்டனர். இதனால் ரன்ரேட் 2-க்கும் கீழாகவே நகர்ந்தது. ஸ்கோர் 32 ரன்களை எட்டிய போது, மயங்க் அகர்வால் (17 ரன், 40 பந்து) கம்மின்சின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். 30-வது ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.

புஜாராவின் மந்தமான பேட்டிங் கொஞ்சம் ‘டல்’ அடித்தாலும் அவரது மனஉறுதிமிக்க நிலையான ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் வியந்தனர். ஒன்று, இரண்டு ரன் வீதம் மட்டுமே எடுத்து வந்த புஜாரா தான் எதிர்கொண்ட 148-வது பந்தில் தான் முதல் பவுண்டரியை அடித்தார். அதுவும் லயனின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி ஓடவிட்ட புஜாரா, அவரது அடுத்த ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாரா (43 ரன், 160 பந்து, 2 பவுண்டரி) பந்தை தடுத்து ஆடிய போது அருகில் நின்ற லபுஸ்சேன் பாய்ந்து விழுந்து கேட்ச் செய்தார். லயனின் சுழலில் புஜாரா விக்கெட்டை தாரைவார்ப்பது இது 10-வது முறையாகும்.


இதன் பின்னர் கேப்டன் விராட் கோலியுடன், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கைகோர்த்தார். இருவரும் கடினமான எதிரணியின் பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டு சமாளித்தனர். அவசரம் காட்டாமல் பொறுமையாக செயல்பட்ட இவர்கள் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் பந்தை ரஹானே சிக்சருக்கு தூக்கியடித்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 188 ரன்களுடன் வலுவான நிலையில் இந்திய அணி இருந்தது. இந்த சூழலில் ரஹானேவின் தவறினால் கோலி ரன்-அவுட்டுக்கு இரையானார். ‘மிட்-ஆப்’ திசையில் பந்தை அடித்து விட்டு சில அடிதூரம் ஓடிய ரஹானே வேண்டாம் என்று பின்வாங்கினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற விராட் கோலி (74 ரன், 180 பந்து, 8 பவுண்டரி) பாதி தூரம் ஓடிவிட்டார். அவர் திரும்பி ஓடுவதற்குள் ரன்-அவுட் செய்யப்பட்டார். அவரது விக்கெட் இந்த இன்னிங்சின் திருப்பு முனை என்று தான் சொல்ல வேண்டும்.

80-வது ஓவருக்கு பிறகு எடுக்கப்பட்ட புதிய பந்தில் ரஹானே (42 ரன், 92 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் (16 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் கடைசிகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிடி இறுகியது.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 15 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மொத்தம் 21 ஓவர்களை மெய்டன்களாக வீசி மிரட்டினர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

இந்தியா

பிரித்வி ஷா (பி) ஸ்டார்க் 0

மயங்க் அகர்வால் (பி)

கம்மின்ஸ் 17

புஜாரா(சி) லபுஸ்சேன் (பி)

லயன் 43

கோலி (ரன்-அவுட்) 74

ரஹானே எல்.பி.டபிள்யூ

(பி) ஸ்டார்க் 42

ஹனுமா விஹாரி எல்.பி.டபிள்யூ

(பி) ஹேசில்வுட் 16

சஹா (நாட்-அவுட்) 9

அஸ்வின் (நாட்-அவுட்) 15

எக்ஸ்டிரா 17

மொத்தம் (89 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 233

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-32, 3-100, 4-188, 5-196, 6-206

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 19-4-49-2

ஹேசில்வுட் 20-6-47-1

கம்மின்ஸ் 19-7-42-1

கேமரூன் கிரீன் 9-2-15-0

நாதன் லயன் 21-2-68-1

லபுஸ்சேன் 1-0-3-0


‘350 ரன்கள் வரை எடுக்க முடியும்’- புஜாரா
முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர் புஜாரா கூறியதாவது:-

ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் (3-188 ரன்) இருந்தோம். விராட் கோலி, ரஹானே ஆகியோரின் விக்கெட் சரிந்ததும் ஆஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கி விட்டது. ஆனாலும் இந்த டெஸ்டை பொறுத்தவரை தற்போது இரு அணியும் சரிசம வாய்ப்பில் இருப்பதாகவே நினைக்கிறேன். அஸ்வினும், சஹாவும் தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளனர். பின்வரிசை வீரர்களும் கணிசமான பங்களிப்பை அளித்தால் 275 முதல் 300 ரன்கள் வரை நெருங்க முடியும். பின்வரிசை வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 350 ரன்களை கூட எட்டலாம்.

அதிக விக்கெட் கைவசம் இருந்தால் புதிய பந்து எடுக்கப்படும் போது கூட போதுமான ரன்களை சேர்க்க முடியும் என்று நினைத்தேன். பந்து ஸ்விங் ஆகும் போது விக்கெட்டை இழக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே முதல் இரு பகுதியில் நாங்கள் பேட் செய்த விதத்தை (மந்தமான பேட்டிங் அணுகுமுறை) நினைத்து வருத்தப் படவில்லை. இவ்வாறு புஜாரா கூறினார்.