கிரிக்கெட்

ஷேவாக்கின் வித்தியாசமான கிண்டல் + "||" + Sehwag Strange teasing

ஷேவாக்கின் வித்தியாசமான கிண்டல்

ஷேவாக்கின் வித்தியாசமான கிண்டல்
இந்திய அணி 36 ரன்னுக்கு அடிபணிந்ததை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் இந்த இன்னிங்சில் இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை 49204084041 என்று வரிசைப்படுத்தி இந்த ஓ.டி.பி. நம்பர் மறந்து விடும் போலிருக்கிறதே என்று கிண்டல் செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டினோ பெஸ்ட், ‘36..... இது என்னுடைய சீருடை நம்பர்’ என்று கூறியுள்ளார். ‘ஞாயிற்றுக்கிழமை பிரீ’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான பிராட் ஹாக் பதிவிட்டு 3 நாளுக்குள் இந்திய அணியின் கதை முடிந்ததை கேலி செய்திருக்கிறார். ‘இந்திய வீரர்கள் அவுட் ஆன விதத்தை குறை சொல்வதில் நியாயமில்லை. ஏனெனில் இது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் சூப்பரான பந்துவீச்சின் வெளிப்பாடு’ என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இரட்டை இலக்கத்தை தொடாத இந்திய வீரர்கள்

* 2-வது இன்னிங்சில் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 9 ரன் எடுத்தார். 143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டாதது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1924-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 30 ரன்னில் சுருண்ட போது அந்த இன்னிங்சில் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்திருந்தனர். ஆனால் அதில் எக்ஸ்டிரா வகையில் தென்ஆப்பிரிக்காவுக்கு 11 ரன்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

* விராட் கோலி டாஸில் ஜெயித்தும் இந்திய அணி தோற்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அவர் டாஸ் ஜெயித்த 25 டெஸ்டுகளில் 21-ல் வெற்றியும், 4-ல் டிராவும் கண்டிருந்தது.

* பகல்-இரவு டெஸ்டுகளில் தோற்றதில்லை என்ற பெருமையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதுவரை ஆடியுள்ள 8 பகல்-இரவு டெஸ்டுகளிலும் அந்த அணிக்கு வெற்றியே கிட்டியுள்ளது.

* இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் 3 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் ஒன்பது 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் ஒரு சதமும் அடிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் அறிமுகம் ஆன போது அந்த சீசனில் அவர் சதம் ஏதும் அடிக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு இது தான் சதமில்லாத ஆண்டாக அமைந்திருக்கிறது.

* வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் டெஸ்டில் 200 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய 18-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை நேற்று பெற்றார். இதுவரை 52 டெஸ்டில் ஆடியுள்ள ஹேசில்வுட் 201 விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.