டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ‘நம்பர் ஒன்’ வீரர் சுமித்தை நெருங்கினார், கோலி


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ‘நம்பர் ஒன்’ வீரர் சுமித்தை நெருங்கினார், கோலி
x
தினத்தந்தி 20 Dec 2020 10:33 PM GMT (Updated: 20 Dec 2020 10:33 PM GMT)

அடிலெய்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது.

துபாய்,

இந்த போட்டியின் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் தொடருகிறார். என்றாலும் அடிலெய்டு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த அவர் 10 தரவரிசை புள்ளிகளை இழந்து தற்போது 901 புள்ளிகள் பெற்றுள்ளார். அதே சமயம் இதே டெஸ்டில் அரைசதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவன் சுமித்தை வெகுவாக நெருங்கிவிட்ட கோலி இன்னும் 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடாததால் போட்டியை தவறவிடுவதற்குரிய புள்ளிகளை இனி இழப்பார். தொடக்க டெஸ்டில் சரியாக சோபிக்காத புஜாரா 11 புள்ளிகளை இழந்ததுடன் தரவரிசையில் ஒரு இடம் குறைந்து 8-வது இடத்துக்கு (755 புள்ளி) தள்ளப்பட்டார். இதே போல் ரஹானே ஒரு இடமும் (11-வது இடம்), மயங்க் அகர்வால் 2 இடமும் (14-வது இடம்) சறுக்கியுள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ ஆக கம்பீரமாக பயணிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவரது தரவரிசை புள்ளி எண்ணிக்கை 904-ல் இருந்து 910 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்தில் (845 புள்ளி) இருக்கிறார். அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் உயர்ந்து 9-வது இடத்தை பெற்றுள்ளார். டாப்-10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டும் தான். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 8-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

Next Story