அடிலெய்டு டெஸ்ட் தோல்வி எதிரொலி: இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்ய முடிவு


அடிலெய்டு டெஸ்ட் தோல்வி எதிரொலி: இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்ய முடிவு
x
தினத்தந்தி 20 Dec 2020 10:44 PM GMT (Updated: 20 Dec 2020 10:44 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்ததால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மெல்போர்ன், 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் ஓரளவு நன்றாக ஆடிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டது. டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. 2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குழந்தை பிறப்புக்காக இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புவதால் எஞ்சிய 3 டெஸ்டில் அவர் விளையாடமாட்டார். அவரது இடத்தில் லோகேஷ் ராகுல் களம் காணுவார் என்று தெரிகிறது.

அடிலெய்டு டெஸ்டில் இந்திய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா இரு இன்னிங்சிலும் கிளீன் போல்டு ஆகி சொதப்பினார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இத்தகைய ஆடுகளத்தில் பந்தை கணித்து ஆடுவதில் அவரது தொழில்நுட்பம் சரியில்லை என்று முன்னாள் வீரர்கள் பலரும் குறை கூறினர். இதனால் அவரை கழற்றி விட்டு பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்த சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் இடத்துக்கும் ஆபத்து வந்துள்ளது. பகல்-இரவு பயிற்சி கிரிக்கெட்டில் சதம் விளாசிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் முதலாவது டெஸ்டில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனுபவம் அடிப்படையில் சஹா வாய்ப்பு பெற்றார். ஆனால் தொடக்க டெஸ்டில் சஹாவின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. இதனால் ரிஷாப் பண்ட் பக்கம் அதிர்ஷ்ட கதவு திறந்துள்ளது. முந்தைய ஆஸ்திரேலிய பயணத்தில் ரிஷாப் பண்ட் சதம் அடித்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.

பந்து தாக்கி வலதுகை மணிக்கட்டுபகுதியில் எலும்பு முறிவுக்குள்ளான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.

இது தொடர்பாக இந்திய தேர்வு குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், ‘நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு எங்களது பிரதான விக்கெட் கீப்பர் வாய்ப்பில் ரிஷாப் பண்ட் தான் இருந்தார். கடந்த சில மாதங்களாக தனது உடல் தகுதி விஷயத்தில் தீவிரம் கவனம் செலுத்திய ரிஷாப் பண்ட் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக கருதுகிறேன். கடைசி 3 டெஸ்டுகளில் ரிஷாப் பண்டை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஹனுமா விஹாரியால் இந்திய டெஸ்ட் அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியும். கோலி இல்லாத நிலையில் பொறுப்புடன் செயல்பட்டு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு. தற்போது 6-வது பேட்டிங் வரிசையில் ஆடும் ஹனுமா விஹாரியை 4-வது அல்லது 5-வது வரிசையில் இறக்கலாம். இந்த புதிய சவாலை வழங்கினால் அவர் சிறப்பாக ஆடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

Next Story