‘தொடரை வெல்வதை தீர்மானிப்பதில் 2-வது டெஸ்ட் முக்கிய பங்கு வகிக்கும்’ ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் சொல்கிறார்


‘தொடரை வெல்வதை தீர்மானிப்பதில் 2-வது டெஸ்ட் முக்கிய பங்கு வகிக்கும்’ ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Dec 2020 11:30 PM GMT (Updated: 21 Dec 2020 10:21 PM GMT)

‘தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிப்பதில் 2-வது டெஸ்ட் போட்டி முக்கிய பங்கு வகிக்கும்’ என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் தெரிவித்தார்.

அடிலெய்டு, 

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் (பகல்-இரவு) போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. டெஸ்ட் போட்டி வரலாற்றில் இந்திய அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் (பாக்சிங் டே) கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. கேப்டன் விராட்கோலி மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இன்று நாடு திரும்புகிறார். பேட்டிங் செய்யும் போது பந்து தாக்கியதில் மணிக்கட்டில் எழும்பு முறிவு ஏற்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எஞ்சிய டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது. இதனால் 2-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சி ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்ததால் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறிக்கு மத்தியில் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜோ பர்ன்ஸ் முதல் இன்னிங்சில் 8 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் (63 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், தனது இடத்தையும் தக்கவைத்து இருக்கிறார்.

2-வது டெஸ்ட் போட்டி குறித்து ஜோ பர்ன்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்க தான் செய்கின்றன. அடுத்த போட்டி முக்கியமானதாகும். அதற்கு நன்றாக தயாராக வேண்டும். நல்ல தொடக்கம் காண்பதுடன் கடந்த போட்டியில் கிடைத்த உத்வேகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு அடுத்த போட்டிக்கு வலுவாக திரும்பும் என்பது எங்களுக்கு தெரியும். டெஸ்ட் போட்டி தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிப்பதில் அடுத்த டெஸ்ட் (மெல்போர்ன்) போட்டி முக்கிய பங்கு வகிக்கும்.

விராட்கோலி, முகமது ஷமி ஆகியோர் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இருவரையும் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களுக்கு மாற்றாக செயல்படுவது என்பது எப்பொழுதும் கடினமானதாகும். இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆழமானது. எனவே அவர்கள் இன்னும் மிகவும் சவாலாக விளங்குவார்கள். பேட்ஸ்மேன் ஒரு நல்ல ஷாட் அடித்தால் இழந்த நம்பிக்கையும், பார்மையும் மீட்டெடுக்க முடியும். உமேஷ் யாதவ் பந்து வீச்சில் நான் அடித்த பவுண்டரி எனது நம்பிக்கையை அதிகரிக்க உதவியது. நான் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகில் நாங்கள் மிகவும் சிறந்த அணியாகும். எந்தவொரு அணிக்கு எதிராகவும், எந்த இடத்திலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். எங்களது பவுலர்கள் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு விரைவில் வெற்றி பெற வழிவகுத்தனர். எங்களது பந்து வீச்சாளர்கள் நீண்ட காலமாக இதுபோல் எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

தொடக்க வீரராக பேட்டிங் செய்வது என்பது மிகவும் சவாலானதாகும். இளம் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா திணறுகிறார். அவர் எந்த மாதிரியான பார்மில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. அவருக்கு எதிராக விளையாடுவதால் இப்போது நான் அவருக்கு எந்த ஆலோசனையும் வழங்க மாட்டேன். போட்டி தொடருக்கு பிறகு அவருக்கு ஆலோசனை வழங்குவேன். இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. அவை கடினமாக இருக்கலாம். வரும் போட்டிகளில் பெரிய சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே எனது இலக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story