நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 22 Dec 2020 10:00 PM GMT (Updated: 22 Dec 2020 6:34 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

நேப்பியர்,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 19 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும், டிம் செய்பெர்ட் 35 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அந்த அணி 11.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பெரும்பாலும் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக தான் ஆட்டம் தடைபடும். ஆனால் சூரிய ஒளியின் காரணமாக இந்த ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. மைதானத்தில் கண் கூசும் அளவுக்கு சூரிய ஒளியின் தாக்கம் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினார்கள். பீல்டர்களுக்கும் பீல்டிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நிறுத்தப்பட்ட ஆட்டம், சூரிய ஒளி மறைந்த பிறகு தான் தொடர்ந்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் நியூசிலாந்து அணியினர் அதிரடியாக ஆடினார்கள்.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தேவோன் கான்வாய் 45 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் (89 ரன்கள், 59 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) நிலைத்து நின்று அதிரடியாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முகமது ஹபீஸ் (41 ரன்கள்) அவருக்கு பக்கபலமாக செயல்பட்டார். கடைசி ஓவரில் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மேலும் 3 ரன் தேவையாக இருந்தது. இப்திகர் அகமது சிக்சர் அடித்து வெற்றி இலக்கை கடக்க வைத்தார்.

இந்த ஆட்டத்தில் தோற்றாலும், முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்ததால் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

அடுத்து நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

Next Story