கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 195 ரன்னில் ஆல்-அவுட் - பும்ரா, அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு + "||" + 2nd Test cricket against India: Run 195 all out in the Australian team - Bumra, Aswin's wacky bowling

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 195 ரன்னில் ஆல்-அவுட் - பும்ரா, அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 195 ரன்னில் ஆல்-அவுட் - பும்ரா, அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு
மெல்போர்னில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
மெல்போர்ன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படும் இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் 4 மாற்றமாக விராட் கோலி, முகமது ஷமி, விருத்திமான் சஹா, பிரித்வி ஷா ஆகியோருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ரிஷாப் பண்ட், சுப்மான் கில் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். இதில் புதுமுகங்களான சுப்மான் கில் இந்தியாவின் 297-வது டெஸ்ட் வீரராகவும், முகமது சிராஜ் இந்தியாவின் 298-வது டெஸ்ட் வீரராகவும் அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லை.

குழுமியிருந்த 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஜோ பர்ன்சும், மேத்யூ வேட்டும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

தொடக்கத்தில், ஆடுகளத்தில் காணப்பட்ட ஈரப்பதம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஒத்துழைத்தது. இதை இந்திய பவுலர்கள் சரியாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கினர். பும்ராவின் பந்து வீச்சில் பர்ன்ஸ் (0) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் (30 ரன்), அஸ்வின் பந்துவீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதுவும் பந்தை பிடிக்க சுப்மான் கில்லும், ஜடேஜாவும் ஓடினர். இருவரும் மோதுவது போல் சென்ற நிலையில் ஜடேஜா சாதுர்யமாக கேட்ச் செய்தார். இதைத் தொடர்ந்து ஸ்டீவன் சுமித் இறங்கினார்.

சுமித்தை இந்திய வீரர்கள் கனகச்சிதமாக திட்டமிட்டு வெளியேற்றினர். அஸ்வின் சற்று லெக்சைடில் வீசிய பந்தை சுமித் தட்டிவிட்ட போது அதை ‘லெக்-கல்லி’யில் நின்ற புஜாரா கேட்ச் செய்தார். இதே போல் தான் அடிலெய்டு டெஸ்டிலும் அஸ்வினின் சுழல்வலையில் அவர் சிக்கினார். ரன் இன்றி வெளியேறிய சுமித் கடந்த 4 ஆண்டுகளில் முதல்முறையாக டக்-அவுட் ஆகியிருக்கிறார். அப்போது அந்த அணி 38 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.

இதன் பின்னர் லபுஸ்சேனுடன், டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். நிதானத்தை கடைபிடித்த இவர்கள் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக லபுஸ்சேன் 26 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். உடனடியாக டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு மேல்வாக்கில் செல்வது தெரிந்ததால் லபுஸ்சேன் தொடர்ந்து விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றார்.

நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்த லபுஸ்சேன்-ஹெட் கூட்டணியை ஸ்கோர் 124 ரன்களை எட்டிய போது பும்ரா உடைத்தார். அவர் ஆப்-சைடுக்கு வெளியே வீசிய பந்து டிராவிஸ் ஹெட் (38 ரன், 92 பந்து, 4 பவுண்டரி) பேட்டை உரசிக்கொண்டு ‘கல்லி’ திசையில் நின்ற ரஹானேவிடம் சிக்கியது. அதே ஓவரில் இரண்டு பந்துகளை நோ-பாலாக வீசிய பும்ரா, நல்லவேளையாக விக்கெட்டுக்குரிய பந்தில் எந்த தவறும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் லபுஸ்சேன் 48 ரன்னில் (132 பந்து, 4 பவுண்டரி), அறிமுக பவுலர் முகமது சிராஜின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கேமரூன் கிரீன் (12 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (13 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். கடைசி கட்டத்தில் நாதன் லயன் 20 ரன்கள் (17 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 72.3 ஓவர்களில் 195 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர். பந்துவீச்சு மட்டுமின்றி, பொறுப்பு கேப்டன் ரஹானேவின் பீல்டிங் வியூகங்களும் கனகச்சிதமாக அமைந்ததாலேயே ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் அடக்க முடிந்தது.

அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (0) மிட்செல் ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பலன் இல்லை. 4 ரன்னில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் சில அழகான பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 28 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), புஜாரா 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

ஜோ பர்ன்ஸ் (சி) பண்ட் (பி)

பும்ரா 0

மேத்யூ வேட் (சி) ஜடேஜா

(பி) அஸ்வின் 30

லபுஸ்சேன் (சி)கில்(பி)சிராஜ் 48

ஸ்டீவன் சுமித் (சி) புஜாரா

(பி) அஸ்வின் 0

டிராவிஸ் ஹெட் (சி) ரஹானே

(பி) பும்ரா 38

கேமரூன் கிரீன் எல்.பி.டபிள்யூ

(பி) சிராஜ் 12

டிம் பெய்ன் (சி) விஹாரி (பி)

அஸ்வின் 13

கம்மின்ஸ் (சி) சிராஜ் (பி)

ஜடேஜா 9

ஸ்டார்க் (சி) சிராஜ் (பி)பும்ரா 7

நாதன் லயன் எல்.பி.டபிள்யூ

(பி) பும்ரா 20

ஹேசில்வுட் (நாட்-அவுட்) 4

எக்ஸ்டிரா 14

மொத்தம் (72.3 ஓவர்களில்

ஆல்-அவுட்) 195

விக்கெட் வீழ்ச்சி: 1-10, 2-35, 3-38, 4-124, 5-134, 6-155, 7-155, 8-164, 9-191

பந்து வீச்சு விவரம்

பும்ரா 16-4-56-4

உமேஷ் யாதவ் 12-2-39-0

அஸ்வின் 24-7-35-3

ரவீந்திர ஜடேஜா 5.3-1-15-1

முகமது சிராஜ் 15-4-40-2

இந்தியா

மயங்க் அகர்வால்

எல்.பி.டபிள்யூ (பி) ஸ்டார்க் 0

சுப்மான் கில் (நாட்-அவுட்) 28

புஜாரா (நாட்-அவுட்) 7

எக்ஸ்டிரா 1

மொத்தம் (11 ஓவர்களில்

ஒரு விக்கெட்டுக்கு) 36

விக்கெட் வீழ்ச்சி: 1-0

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 4-2-14-1

கம்மின்ஸ் 4-1-14-0

ஹேசில்வுட் 2-0-2-0

நாதன் லயன் 1-0-6-0