நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது பாகிஸ்தான்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Dec 2020 7:49 PM GMT (Updated: 28 Dec 2020 7:49 PM GMT)

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது.

இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 80 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதனால் பாகிஸ்தான் பாலோ-ஆன் ஆபத்தை (232 ரன்) தவிர்க்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்த சூழலில் கேப்டன் முகமது ரிஸ்வானும், பகீம் அஷ்ரப்பும் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றினர். இடையில் இரண்டு நேரம் மழையாலும் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஸ்கோர் 187 ரன்களாக உயர்ந்த போது முகமது ரிஸ்வான் (71 ரன்) ரன்-அவுட் ஆகிப்போனார். இதன் பின்னர் பகீம் அஷ்ரப் போராடி ஒரு வழியாக ‘பாலோ-ஆன்’ ஸ்கோரை கடக்க வைத்தார். அஷ்ரப் 91 ரன்கள் (15 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 192 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி இன்றைய 4-வது நாளில் 2-வது இன்னிங்சை ஆடும்.

Next Story