கிரிக்கெட்

2020-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது யார்? + "||" + In 2020, In international cricket Who dominated

2020-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது யார்?

2020-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
2020-ம் ஆண்டில் மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளே நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது.
மும்பை, 

இன்று 2021-ம் ஆண்டு பிறந்துள்ளது. அதற்கு முன்பாக 2020-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்தது யார்? சறுக்கியது யார் ? என்பதை பார்க்கலாம். ஆனால் கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டில் நிறைய தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டதால் சாதனைகளும் குறைந்து போனது என்று தான் சொல்ல வேண்டும்.

2020-ம் ஆண்டில் மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளே நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 4 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. அதிக ரன் குவிப்பில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2 சதம் உள்பட 641 ரன்களுடன் (7 டெஸ்ட்) முதலிடம் வகிக்கிறார். பந்து வீச்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (38 விக்கெட், 8 டெஸ்ட்) ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

மொத்தம் 26 சதங்கள் பதிவாகியுள்ளன. இந்திய தரப்பில் ரஹானே மட்டுமே (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 112 ரன்) செஞ்சூரி இடத்தை நிரப்பியுள்ளார். அணி அதிகபட்சத்தை தென்ஆப்பிரிக்காவும் (621 ரன், இலங்கைக்கு எதிராக), குறைந்தபட்ச மோசமான சாதனையை இந்தியாவும் (36 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) பெற்றுள்ளன.

வழக்கமாக ஒரு சீசனில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளின் எண்ணிக்கை 100-க்கு மேல் சர்வ சாதாரணமாக கடந்து விடும். ஆனால் கொரோனாவின் விசுவரூபத்தால் கடந்த ஆண்டில் நடந்த ஒரு நாள் போட்டிகள் வெறும் 44 தான். இவற்றில் இந்திய அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் சந்தித்தது.

அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்களே உள்ளனர். அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 2 சதம் உள்பட 673 ரன்கள் (13 ஆட்டம்) சேர்த்துள்ளார். அதிக விக்கெட்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா (13 ஆட்டத்தில் 27 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.

கடந்த சீசனை போல் இந்த முறையும் 20 ஓவர் போட்டிகள் தான் அதிகமாக நடந்துள்ளது. நிறைய சிறிய அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதன் விளைவு இது தான். ஸ்பெயின், உகாண்டா, தாய்லாந்து, பக்ரைன், செக்குடியரசு, ஜெர்மனி, பல்கேரிய போன்ற நாடுகளும் 20 ஓவர் போட்டியில் ஆடின. மொத்தம் 95 ஆட்டங்கள் நடந்துள்ளது.

20 ஓவர் போட்டிகளில் தான் இந்திய அணி இந்த முறை கோலோச்சியிருக்கிறது. அதிகபட்சமாக 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் 9-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

அதிக ரன் குவிப்பில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் 415 ரன்களுடன் (10 ஆட்டம்) முதலிடமும், இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 4 அரைசதம் உள்பட 404 ரன்கள் (11 ஆட்டம்) எடுத்து 2-வது இடமும் பெற்றனர்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இந்திய அணி மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 24 ஆட்டங்களில் தான் ஆடியிருக்கிறது. கொரோனா பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை இரு மடங்காகியிருக்கும். இந்திய கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு சீசனிலும் ரன்மழை பொழிவார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு சதமில்லா ஆண்டாகவும் இது அமைந்து விட்டது.