‘இந்தியாவின் வித்தியாசமான பீல்டிங் வியூகத்தை உடைப்போம்’ ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் சொல்கிறார்


‘இந்தியாவின் வித்தியாசமான பீல்டிங் வியூகத்தை உடைப்போம்’ ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் சொல்கிறார்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்னி, 

டெஸ்டில் இந்திய பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே லெக்சைடில் அதிக பீல்டர்களை நிறுத்தி உருவாக்கிய பீல்டிங் அமைப்பு ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ‘லெக்சைடு’ வாக்கில் போடப்பட்ட பந்தில் ஸ்டீவன் சுமித் விக்கெட்டை பறிகொடுத்தார். 2-வது இன்னிங்சில் அவர்களின் ரன்ரேட் 1.94 என்று மந்தமாகவே இருந்தது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

லெக்சைடில் பீல்டிங் வியூகம் வகுத்து அதற்கு ஏற்ப பந்து வீசப்படுவது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். இதனால் பவுண்டரிகள் அடிப்பது மட்டும் கடினமாக இருக்காது. ஒன்று, இரண்டு வீதம் சீராக ரன் எடுப்பதும் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் விளையாடினாலும் கூட, அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. இந்திய வீரர்களை நீங்கள் பாராட்டியாக வேண்டும். அவர்கள் இந்த தொடருக்கு தெளிவான திட்டமிடலுடன் வந்திருக்கிறார்கள். இந்த நவீனகால போட்டியில் எதிரணியை முடக்க ஒவ்வொரு அணி வீரர்களும் புதுப்புது திட்டமிடலுடன் தான் வருவார்கள். அதற்கு ஏற்ப நாம் தயாராக இருக்க வேண்டும். இந்திய பவுலர்கள் ஆப்-சைடில் அதிகமான ரன்கள் எடுக்க விடவில்லை. எனவே இந்தியாவின் இத்தகைய வியூகத்தை உடைத்து நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதை எப்படி செய்யப்போகிறோம் என்பதை உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையுடன் பேட்டிங்கில் தீவிரத்தன்மையை காட்ட வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.

முதல் இரு டெஸ்டில் ஸ்டீவன் சுமித் சரியாக ஆடாதது குறித்து கேட்கிறீர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவர் ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் அடுத்தடுத்து சதம் விளாசினார். இப்போது ஒரு சில இன்னிங்சில் அவர் ரன் எடுக்கவில்லை. அவர் சாம்பியன் பேட்ஸ்மேன். எனவே அவருக்கு அழுத்தம் இருக்காது. விரைவில் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு லபுஸ்சேன் கூறினார்.

Next Story