கிரிக்கெட்

3-வது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை எட்ட வாய்ப்பில்லை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேட்டி + "||" + Within the 3rd Test match Not likely to reach full fitness Interview with Australian player Warner

3-வது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை எட்ட வாய்ப்பில்லை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேட்டி

3-வது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை எட்ட வாய்ப்பில்லை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் பேட்டி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்றாலும் களம் காண எல்லாவித முயற்சியையும் மேற்கொள்வேன் என்று ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கூறினார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதலாவது டெஸ்டில் தோற்ற போதிலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து மெல்போர்னிலேயே பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் சிட்னிக்கு நாளை புறப்பட்டு செல்கிறார்கள்.மெல்போர்னில் படுதோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இரு இன்னிங்சிலும் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் கழற்றி விடப்பட்டார். காயத்தால் ஓய்வில் இருந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது தொடையும், இடுப்பும் சேருமிடத்தில் காயமடைந்த வார்னர் முதல் இரு டெஸ்டில் விளையாடவில்லை. தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் முழுமையாக குணமடையாவிட்டாலும் கூட சிட்னி டெஸ்டில் அவரை களம் இறக்க தயங்கமாட்டோம் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு கூறினார்.

இந்த நிலையில் 34 வயதான வார்னர் நேற்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கடந்த இரு தினங்களாக நான் ஓடுவதற்குரிய பயிற்சி எதுவும் செய்யவில்லை. இன்றும் (அதாவது நேற்று), நாளையும் நான் பயிற்சியில் ஈடுபட உள்ளேன். அப்போது எனது உடல்தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்து விடும். ஆனால் போட்டிக்குள் 100 சதவீதம் உடல்தகுதியை எட்டுவது என்பது நிச்சயம் சந்தேகம் தான். ஆனால் முழுமையான உடல்தகுதியை அடையாவிட்டாலும் கூட 3-வது டெஸ்டில் களம் இறங்குவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வேன்.

தற்போதைய நிலைமையில் சில ஷாட்டுகளைத்தான் அடிக்க முடியும். ஆனால் எந்த மாதிரியான ஷாட்டுகளை என்னால் அடிக்க முடியும் அல்லது முடியாது என்பது பிரச்சினை அல்ல. ரன் எடுக்க வேகமாக ஓட வேண்டியதே முக்கியம். ஆனால் இதை என்னால் சமாளிக்க முடியும். எனது பங்களிப்பை அளிக்க முடியும் என்று உணர்கிறேன் என்றால், ‘ஸ்லிப்’ பகுதியில் பீல்டிங் நிற்கும் போது இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ சிரமமின்றி பாய்ந்து விழுந்து கேட்ச் செய்ய வேண்டும். இந்த விஷயம் தான் இந்த டெஸ்டில் என்னால் விளையாட முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கப்போகிறது.’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வார்னர் செயல்பட்டார். ஐதராபாத் அணிக்காக ஆடிய தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். 20 ஓவர் போட்டிகளில் மிரட்டிய நடராஜன் டெஸ்ட் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று வார்னரிடம் கேட்ட போது, ‘இது நல்ல கேள்வி. ஆனால் டெஸ்ட் போட்டியிலும் அவர் அசத்துவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ரஞ்சி கிரிக்கெட்டில் அவரது சாதனை என்ன? ஒவ்வொரு நாளும் எப்படி பந்து வீசியிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரால் துல்லியமான அளவில் பந்து வீச முடியும் என்பதை அறிவேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ந்து இவ்வாறு செய்ய முடியுமா? என்பதை என்னால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியாது.

தனது முதலாவது குழந்தை பிறக்கும் போது உடன் இருக்க இயலாமல் ஐ.பி.எல்.-ல் விளையாடி விட்டு அதன் தொடர்ச்சியாக வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு வந்து இப்போது அணியிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இது அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்றார்.