கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது பிரதமர் மோடி நலம் விசாரித்தார்


கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது பிரதமர் மோடி நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 3 Jan 2021 11:00 PM GMT (Updated: 3 Jan 2021 8:46 PM GMT)

சவுரங் கங்குலிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆரோக்கியத்தைக் காட்டும் குறியீடுகள் இயல்பாக உள்ளதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். ‘இன்று (நேற்று) காலை அவர் சிற்றுண்டி சாப்பிட்டார், செய்தித்தாள் வாசித்தார், மருத்துவமனை ஊழியர்களுடன் உரையாடினார். அவருக்கு வழக்கமான ஈ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது’ என்று கங்குலிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் குழுவைச் சேர்ந்த ஒரு டாக்டர் தெரிவித்தார். அவருக்கு தொடர்ந்து எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது என்று தங்கள் மருத்துவ நிபுணர் குழு நாளை (இன்று) முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

கங்குலியின் உடல்நிலையை மதிப்பிட்டு, அதன்பின் மற்றொரு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ செய்வதா இல்லையா என முடிவு செய்யப்படும். அதேநேரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி மேற்கொள்வது குறித்து யோசிக்கப்படவில்லை என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, கங்குலியை நேற்று தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தார். கங்குலியின் மனைவி டோனாவிடமும் பேசினார். முக்கிய பிரமுகர்கள் பலரும் கங்குலியை நேரில் வந்து பார்த்தனர். ஆஸ்பத்திரி முன் திரண்ட அவரது ரசிகர்கள், ‘திரும்பி வாருங்கள் தாதா’ (அவரது செல்லப்பெயர்) என்று எழுதிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

Next Story