கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + The last Test against New Zealand Pakistan team All-out for 297 runs

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
கிறைஸ்ட்சர்ச்,

பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. கை பெருவிரவில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ‘பீல்டிங்’கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் டிம் சவுதி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.ஆனார்.

அடுத்து இறங்கிய அசார் அலி, நியூசிலாந்து வீரர்களின் பவுன்சர்களுடன் கூடிய மிரட்டும் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 25 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 1 ரன்னிலும், பவாத் ஆலம் 2 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 61 ரன்னிலும் (71 பந்து, 11 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் வீழ்த்தி எதிரணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டார்.

அணியின் ஸ்கோர் 227 ரன்களை எட்டிய போது நிலைத்து நின்று ஆடிய அசார் அலி 172 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் மேட் ஹென்றி பந்து வீச்சில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். கடைசிகட்டத்தில் சற்று தாக்குப்பிடித்து ஆடிய பஷீம் அஷ்ரப் 48 ரன்னிலும், ஜாபர் கோஹர் 34 ரன்னிலும் வெளியேறினர்.

மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட இந்த டெஸ்டில் நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜாமிசன் 5 விக்கெட்டும், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 6-வது டெஸ்டில் ஆடும் கைல் ஜாமிசன் 3-வது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.