கிரிக்கெட்

கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனில் கடைசி டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் தயக்கம் + "||" + In Brisbane To play in the last Test, Indian players reluctant

கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனில் கடைசி டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் தயக்கம்

கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளால் பிரிஸ்பேனில் கடைசி டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் தயக்கம்
பிரிஸ்பேனில் கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகள் இருப்பதால் அங்கு சென்று கடைசி டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.
சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 7-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பிரிஸ்பேன் நகரை உள்ளடக்கிய குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வீரர்கள் ஓட்டலிலேயே முடங்க வேண்டிய நிலைமை உள்ளது. அதாவது ஓட்டலில் இருந்து மைதானம், மைதானத்தில் இருந்து ஓட்டல் என்று தான் இருக்க வேண்டுமாம். வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது.

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிக்காக துபாயில் 14 நாட்கள் தனிமை, அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் கால்பதித்ததும் 14 நாட்கள் தனிமை என்று கிட்டத்தட்ட ஒரு மாதம் தனிமைப்படுத்தும் நடைமுறை இந்திய வீரர்களை வெகுவாக வாட்டிவிட்டது. ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் வீரர்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டு கொஞ்சம் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். இந்த சூழலில் மறுபடியும் பிரிஸ்பேனில் தனிமைப்படுத்தப்படுவது என்பது மனரீதியாக சோர்வடையச் செய்யும். எனவே இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல தயக்கம் காட்டுகிறார்கள். அதே சமயம் இந்த டெஸ்டை பிரிஸ்பேன் தவிர வேறு எந்த இடத்திலும் விளையாட இந்திய தரப்பினர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியிலேயே நடக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, இந்திய வீரர்களுக்கு என்று கொரோனா தடுப்பு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பே இல்லை என்று குயின்ஸ்லாந்து மாகாண அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிட்னியில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அதன் தொடர்பை துண்டிக்கும் வகையில் எல்லையை ஏற்கனவே மூடிவிட்ட குயின்ஸ்லாந்து அரசு, கிரிக்கெட் வீரர்கள், ஒளிபரப்புதாரர்கள் தனிவிமானத்தில் பிரிஸ்பேன் வருவதற்கு மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த மாகாண சுகாதாரத்துறை மந்திரி ரோஸ் பேட்ஸ், விளையாட்டுத்துறை மந்திரி டிம் மேன்டர் ஆகியோர் கூறுகையில், ‘குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு இந்திய வீரர்கள் விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிஸ்பேன் வர வேண்டாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு இங்கு இடமில்லை. ஒவ்வொரு தனிநபர்களுக்கும் விதிமுறை ஒன்று தான். அதை கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும். இந்திய வீரர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கமாட்டோம், மதிக்கமாட்டோம் என்றால் இங்கு வரவேண்டாம்’ என்றனர். இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல மறுப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு புது தலைவலியாக அமைந்துள்ளது.

பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியாவின் வெற்றி கோட்டையாகும். அங்கு 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் தோற்றதில்லை. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் வெற்றி பெறாத ஒரே இடம் பிரிஸ்பேன் தான்.

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளை ஒரே இடத்தில் (சிட்னியில்) விளையாட நாங்கள் விரும்பவில்லை. ஓட்டலிலேயே முடங்கி கிடக்கும் நடைமுறை இருந்தாலும் கடைசி டெஸ்ட் திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. எனவே பிரிஸ்பேனில் விளையாடுவோம் என்று முழுமையாக எதிர்பார்க்கிறோம். கடுமையான தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு நிச்சயம் இருக்கும். ஆனால் மேலும் தியாகங்கள் செய்யவும், சவால்களை சந்திக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார்.