பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசல்


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசல்
x
தினத்தந்தி 4 Jan 2021 10:28 PM GMT (Updated: 4 Jan 2021 10:28 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் அடித்தார்.

கிறைஸ்ட்சர்ச், 

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 297 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக அசார் அலி 93 ரன்னும், பொறுப்பு கேப்டன் முகமது ரிஸ்வான் 61 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜாமிசன் 5 விக்கெட்டும், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 71 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் பிளன்டெல் 16 ரன்னிலும், டாம் லாதம் 33 ரன்னிலும், அடுத்து வந்த ராஸ் டெய்லர் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இந்த விக்கெட்டுகளை முறையே பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அப்பாஸ் ஆகியோர் வீழ்த்தினார்கள்.

4-வது விக்கெட்டுக்கு ஹென்றி நிகோல்ஸ், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் கைகோர்த்தார். ஹென்றி நிகோல்ஸ் 3 ரன்னில் இருக்கையில் ஷகீன் ஷா அப்ரிடி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் ஆனார். ஆனால் அந்த பந்து நோ-பால் என்று 3-வது நடுவர் அறிவித்ததால் அவர் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். இந்த விக்கெட் வீழ்ந்து இருந்தால் நியூசிலாந்து அணியின் நிலை மோசமாகி இருக்கக்கூடும். ஆனால் அதன் பிறகு இருவரும் எதிரணிக்கு வாய்ப்பு எதுவும் அளிக்காமல் நிதானமாகவும், நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் நல்ல நிலைக்கு உயர்த்தினார்கள்.

105 பந்துகளில் அரைசதத்தை கடந்த நம்பர் ஒன் வீரரான வில்லியம்சன் அடுத்த 35 பந்துகளில் மேலும் 50 ரன்களை திரட்டி சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அடித்த 24-வது சதம் இதுவாகும். அவர் முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்து இருந்தார். முன்னதாக பொறுமையாக ஆடிய ஹென்றி நிகோல்ஸ் 107 பந்துகளில் அரைசதத்தை தாண்டினார். இந்த இணையை பிரிக்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன்-நிகோல்ஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 215 ரன்கள் திரட்டியது. இந்த விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும். வில்லியம்சன் 175 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 112 ரன்னும், ஹென்றி நிகோல்ஸ் 186 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 89 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story