கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் மழையால் ஆட்டம் பாதிப்பு + "||" + The Australian team had a great start to the game due to rain

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் மழையால் ஆட்டம் பாதிப்பு
மழை பாதிப்புக்கு இடையே இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.
சிட்னி, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மா, நவ்தீப் சைனி இடம் பிடித்தனர். இதில் உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்வேட்டை நடத்தியதன் மூலம் முதல்முறையாக சர்வதேச போட்டிக்குள் நுழைந்த 22 வயதான புகோவ்ஸ்கி ஆஸ்திரேலியாவின் 460-வது டெஸ்ட் வீரர் ஆவார். இதே போல் நவ்தீப் சைனி இந்தியாவின் 299-வது டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆனார்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய வார்னர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. முகமது சிராஜ் வீசியதில் ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை ஓங்கி அடித்த போது அது பேட்டின் முனையில் பட்டு ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் சிக்கியது. அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். ஆஸ்திரேலியா 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதுடன் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

மழை ஓய்ந்து ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது புகோவ்ஸ்கியும், லபுஸ்சேனும் அணியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். புகோவ்ஸ்கி பக்கம் அதிர்ஷ்ட காற்றும் வீசியது. அஸ்வின் பந்து வீச்சில் 26 ரன்னில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தவற விட்டார். அதன் பிறகு 32 ரன்னில் புகோவ்ஸ்கியின் பேட்டில் பட்டு பின்பகுதிக்கு எகிறிய பந்தை ரிஷாப் பண்ட் பாய்ந்து பிடிக்க முயற்சித்தார். பந்து அவரது கையுறைக்குள் விழுந்து நழுவிப்போனது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட புகோவ்ஸ்கி அறிமுக டெஸ்டிலேயே அரைசதத்தை எட்டி அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்த போது, புகோவ்ஸ்கி 62 ரன்களில் (110 பந்து, 4 பவுண்டரி) நவ்தீப் சைனியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் இறங்கினார். இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை அஸ்வினின் சுழலில் சிக்கிய சுமித் இந்த முறை அவரது பந்து வீச்சை மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு ஆடினார். அவரது முதல் 2 ஓவர்களில் 2 பவுண்டரி ஓடவிட்டார். அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த போதிலும் அதை திறம்பட சமாளித்து ரன் சேகரித்தார்.

மறுமுனையில் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய லபுஸ்சேன் தனது 9-வது அரைசதத்தை கடந்தார். இருவரும் அழுத்தமாக காலூன்றியதால் ஆஸ்திரேலியா சிறந்த நிலைக்கு நகர்ந்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சேன் 67 ரன்களுடனும் (149 பந்து, 8 பவுண்டரி), சுமித் 31 ரன்களுடனும் (64 பந்து, 5 பவுண்டரி) களத்தில் உள்ளனர். மழையால் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் முதல் நாளில் 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இதனால் இன்றைய 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடக்கும். சிட்னி வானிலையை பொறுத்தவரை வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

புகோவ்ஸ்கி எல்.பி.டபிள்யூ

(பி) சைனி 62

வார்னர் (சி) புஜாரா (பி) சிராஜ் 5

லபுஸ்சேன் (நாட்-அவுட்) 67

ஸ்டீவன் சுமித் (நாட்-அவுட்) 31

எக்ஸ்டிரா 1

மொத்தம் (55 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 166

விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-106

பந்துவீச்சு விவரம்

பும்ரா 14-3-30-0

முகமது சிராஜ் 14-3-46-1

அஸ்வின் 17-1-56-0

நவ்தீப் சைனி 7-0-32-1

ஜடேஜா 3-2-2-0

ஆண்கள் டெஸ்டில் முதல் பெண் நடுவர்

*சிட்னி டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, ஆஸ்திரேலியாவின் புதுமுக வீரர் புகோவ்ஸ்கியின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அறிமுக வீரர் ஒருவர் எதிரணியின் அறிமுக வீரரின் விக்கெட்டை சாய்ப்பது கடந்த 21 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இந்திய தரப்பில் கடைசியாக ஜாகீர்கான் 2000-ம் ஆண்டில் வங்காளதேசத்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டில் இத்தகைய சாதனையை செய்திருந்தார்.

* இந்த டெஸ்டில் 4-வது மற்றும் மாற்று நடுவர் இடத்தில் ஆஸ்திரேலிய பெண் நடுவர் 32 வயதான கிளாரி போலோசக் இருக்கிறார். 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் டெஸ்ட் போட்டி ஒன்றில் பெண் நடுவர் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

* முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘களத்தில் அதிக நேரம் நின்று ஆடியது மகிழ்ச்சி. முதல் இரு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சில் நன்றாக ஆடவில்லை. அதனால் அவரை கொஞ்சம் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினேன். தொடக்கத்திலேயே சில பவுண்டரிகளை அடித்தது உற்சாகம் தந்தது. லபுஸ்சேன் சிறப்பாக விளையாடினார். அது 2-வது நாளிலும் தொடரும் என்று நம்புகிறேன்’ என்றார்.