கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ வலுவான நிலையில் ஆஸ்திரேலியா + "||" + Australia were all-out for 244 in the Indian team

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்யா ரஹானே (5 ரன்), புஜாரா (9 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்து தாக்குதலை தொடுத்து நெருக்கடி கொடுத்தனர். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் இல்லை.

ரஹானே 22 ரன்னில் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்துக்கு இரையானார். சற்று எழும்பி வந்த பந்தை ரஹானே தடுத்து ஆட முற்பட்ட போது பேட்டின் முனையில் உரசிக்கொண்டு ஸ்டம்பை பதம்பார்த்தது. அடுத்து வந்த ஹனுமா விஹாரி (4 ரன், 38 பந்து) ரன்-அவுட் ஆனார்.

இதன் பின்னர் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூட்டணி போட்டார். பண்ட் கொஞ்சம் வேகமாக ரன் திரட்டினார். மறுமுனையில் ரொம்பவே பொறுமையை கடைபிடித்த புஜாரா 174 பந்துகளில் தான் அரைசதத்தை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மெதுவான அரைசதம் இது தான். அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. ஸ்கோர் 195 ரன்களை எட்டிய போது ரிஷாப் பண்ட் (36 ரன், 67 பந்து, 4 பவுண்டரி) ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற வார்னரிடம் பிடிபட்டார். அடுத்த ஓவரில் புஜாரா (50 ரன், 176 பந்து, 5 பவுண்டரி) கம்மின்சின் பந்து வீச்சில் வீழ்ந்தார். ‘பிட்ச்’ ஆகி சற்று எகிறிய பந்து அவரது கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. இதன் பிறகு இந்திய அணி முற்றிலும் நிலைகுலைந்தது. கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா (28 ரன், 37 பந்து, 5 பவுண்டரி) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் 37 ஓவர்களை மெய்டனாக வீசி இந்தியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.

வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் புகோவ்ஸ்கி (10 ரன்), டேவிட் வார்னர் (13 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் வெளியேற்றப்பட்டனர். வார்னர், அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் கிட்டவில்லை. டெஸ்டில் அஸ்வின் வீசிய வலையில் வார்னர் சிக்குவது இது 10-வது நிகழ்வாகும். அஸ்வினின் பந்து வீச்சில் அதிகமுறை அவுட் ஆன வீரர் வார்னர் தான். ஆனால் இந்திய பவுலர்களின் உற்சாகத்தை 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் சுமித்தும் சீர்குலைத்தனர்.

இருவரும் நிலைத்து நின்று ஆடியதோடு மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது. லபுஸ்சேன் 47 ரன்களுடனும் (69 பந்து, 6 பவுண்டரி), சுமித் 29 ரன்களுடனும் (63 பந்து, 3 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

இந்த டெஸ்டில் தற்போது ஆஸ்திரேலியாவின் கை முழுமையாக ஓங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய 4-வது நாளில் அவர்கள் அதிரடியாக விளையாடி இமாலய ஸ்கோரை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்போகிறார்கள். இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா 338

இந்தியா

ரோகித் சர்மா (சி) அண்ட்

(பி) ஹேசில்வுட் 26

சுப்மான் கில் (சி) கிரீன்(பி)

கம்மின்ஸ் 50

புஜாரா (சி) பெய்ன் (பி)

கம்மின்ஸ் 50

ரஹானே (பி) கம்மின்ஸ் 22

ஹனுமா விஹாரி (ரன்-அவுட்) 4

ரிஷாப் பண்ட் (சி) வார்னர்

(பி) ஹேசில்வுட் 36

ஜடேஜா (நாட்-அவுட்) 28

அஸ்வின் (ரன்-அவுட்) 10

நவ்தீப் சைனி (சி) வேட்

(பி) ஸ்டார்க் 3

பும்ரா (ரன்-அவுட்) 0

முகமது சிராஜ் (சி) பெய்ன்

(பி) கம்மின்ஸ் 6

எக்ஸ்டிரா 9

மொத்தம் (100.4 ஓவர்களில்

‘ஆல்-அவுட்’) 244

விக்கெட் வீழ்ச்சி: 1-70, 2-85, 3-117, 4-142, 5-195, 6-195, 7-206, 8-210, 9-216.

பந்து வீச்சு விவரம்

மிட்செல் ஸ்டார்க் 19-7-61-1

ஹேசில்வுட் 21-10-43-2

கம்மின்ஸ் 21.4-10-29-4

நாதன் லயன் 31-8-87-0

லபுஸ்சேன் 3-0-11-0

கேமரூன் கிரீன் 5-2-11-0

2-வது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

வார்னர் எல்.பி.டபிள்யூ (பி)

அஸ்வின் 13

புகோவ்ஸ்கி (சி) (சப்) சஹா

(பி) சிராஜ் 10

லபுஸ்சேன் (நாட்-அவுட்) 47

ஸ்டீவன் சுமித் (நாட்-அவுட்) 29

எக்ஸ்டிரா 4

மொத்தம் (29 ஓவர்களில்

2 விக்கெட்டுக்கு) 103

விக்கெட் வீழ்ச்சி: 1-16, 2-35

பந்து வீச்சு விவரம்

ஜஸ்பிரித் பும்ரா 8-1-26-0

முகமது சிராஜ் 8-2-20-1

நவ்தீப் சைனி 7-1-28-0

அஸ்வின் 6-0-28-1

இந்திய வீரர்களை இனரீதியாக சீண்டிய ரசிகர்கள்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர். 3-வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பந்து தாக்கி ரிஷாப் பண்ட், ஜடேஜா காயம்

இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த போது, துரதிர்ஷ்டவசமாக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயமடைந்தனர். கம்மின்ஸ் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை ரிஷாப் பண்ட் விரட்ட முயற்சித்த போது பந்து பேட்டில் படாமல் நேரடியாக இடது முழங்கை பகுதியை பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பியதும் உடனடியாக ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் விக்கெட் கீப்பிங் பணியை அவருக்கு பதிலாக விருத்திமான் சஹா கவனித்தார்.

இதே போல் ஜடேஜா, கடைசி விக்கெட்டுக்கு பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மிட்செல் ஸ்டார்க் ஆக்ரோஷமாக வீசிய பந்து இடதுகை பெருவிரலில் பட்டு தெறித்தது. இதனால் விரலில் வீக்கம் ஏற்பட்டது. காயத்தன்மையை அறிய ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் கடைசி டெஸ்டில் ஆடமுடியாது. ரிஷாப் பண்டை பொறுத்தமட்டில் காயம் பெரிய அளவில் இல்லாததால் அவர் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ‘ரன்-அவுட்’

* முதல் இன்னிங்சில் ஹனுமா விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகியோர் ரன்-அவுட்டில் சிக்கியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. ஒரு இன்னிங்சில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் ரன்-அவுட் ஆவது இது 7-வது நிகழ்வாகும். கடைசியாக 2008-ம் ஆண்டில் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஷேவாக், லட்சுமண், யுவராஜ்சிங் ஆகிய 3 இந்திய வீரர்கள் ரன்-அவுட் ஆகியிருந்தனர்.

* இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழும் புஜாரா இந்த இன்னிங்சிலும் உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலரான கம்மின்சின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். நடப்பு தொடரில் அவர் கம்மின்சின் பவுலிங்கில் 4-வது முறையாக விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். ஒரு தொடரில் புஜாராவின் விக்கெட்டை 4 முறை கபளீகரம் செய்த முதல் பவுலர் கம்மின்ஸ் தான். இந்த தொடரில் இதுவரை 5 இன்னிங்சில் ஆடியுள்ள புஜாரா, கம்மின்சின் பந்து வீச்சில் 129 பந்துகளை எதிர்கொண்டு அதில் வெறும் 19 ரன் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.