முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழகம்


முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழகம்
x
தினத்தந்தி 11 Jan 2021 12:23 AM GMT (Updated: 11 Jan 2021 12:23 AM GMT)

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் வெற்றியுடன் தொடங்கியது.

கொல்கத்தா, 

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 10 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி எலைட் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியை கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று சந்தித்தது. முதலில் பேட் செய்த தமிழகம் 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 92 ரன்களும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 46 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அசத்தினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தமிழக அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கர்நாடக மாநிலம் ஆலுரில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் அணி 11 ரன் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 7 விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்தது. இந்த எளிய இலக்கை கூட எடுக்க முடியாமல் உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 123 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. சுரேஷ் ரெய்னா (56 ரன், 50 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றும் பலன் இல்லை.

Next Story