கடைசி இன்னிங்சில் அதிக ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்திய அணி சாதனை


கடைசி இன்னிங்சில் அதிக ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்திய அணி சாதனை
x
தினத்தந்தி 11 Jan 2021 11:51 PM GMT (Updated: 11 Jan 2021 11:51 PM GMT)

கடைசி இன்னிங்சில் அதிக ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

சிட்னி,

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்சில் இந்திய வீரர் புஜாரா 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 47 ரன்னை எட்டிய போது டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 11-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 32 வயதான புஜாரா 80 டெஸ்டில் விளையாடி 6,030 ரன்கள் எடுத்துள்ளார்.

* சிட்னி டெஸ்டில் 4-வது இன்னிங்சில் ( டெஸ்டில் இலக்கை நோக்கி ஆடும் கடைசி இன்னிங்ஸ்) இந்திய அணி மொத்தம் 131 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடி பிரமிக்க வைத்தது. 4-வது இன்னிங்சில் இந்திய அணி 130 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து தோல்வியில் இருந்து தப்பியது கடந்த 41 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1979-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 150.5 ஓவர்கள் சமாளித்து ‘டிரா’ செய்து இருந்தது.

* ஆஸ்திரேலிய மண்ணில் 4-வது இன்னிங்சில் அதிக ஓவர்களை எதிர்கொண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியில் இருந்து தப்பிய ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

* 2-வது இன்னிங்சில் 4-வது விக்கெட்டுக்கு புஜாரா-ரிஷாப் பண்ட் ஜோடி 148 ரன்கள் சேர்த்தது. 4-வது இன்னிங்சில் இந்த விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1949-ம் ஆண்டில் மும்பையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் விஜய் ஹசாரே-ருசி மோடி இணை 139 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 72 ஆண்டு கால சாதனையை புஜாரா- ரிஷாப் பண்ட் ஜோடி முறியடித்துள்ளது.

* 6-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த அஸ்வின்-ஹனுமா விஹாரி ஜோடி 256 பந்துகளை எதிர்கொண்டது. அதிக பந்துகளை எதிர்கொண்ட வகையில் 4-வது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் 3-வது அதிகபட்சம் இதுவாகும்.

Next Story