சிட்னி டெஸ்டில் கடைசி நாளில் ‘நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ - ரஹானே பேட்டி


சிட்னி டெஸ்டில் கடைசி நாளில் ‘நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ - ரஹானே பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2021 11:56 PM GMT (Updated: 11 Jan 2021 11:56 PM GMT)

சிட்னி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்தார்.

சிட்னி, 

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இன்று (நேற்று) களம் இறங்கும் முன்பாக ஆட்டத்தின் முடிவை பற்றி சிந்திக்காமல் கடைசி வரை எங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பேசினோம். அந்த வகையில் குறிப்பாக கடைசி நாளில் நாங்கள் இறுதி வரை போராடிய விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 200 ரன்கள் என்று நல்ல நிலையில் இருந்தது. அந்த அணியை 338 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆக்கியது சிறப்பானதாகும்.

4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாங்கள் சில விஷயங்களில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். இந்த போட்டியில் ஆர்.அஸ்வின், ஹனுமா விஹாரியின் ஆட்டம் அருமையாக இருந்தது. இதேபோல் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கையில், ‘கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது ஆட்டத்தின் முடிவில் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனது விக்கெட் கீப்பிங் திறமையில் நான் பெருமை கொள்வேன். ஆனால் நான் இந்த போட்டியில் 3 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டேன். இதனை போல் மோசமாக ஒருபோதும் நான் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை. எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் எங்களுக்காக நல்ல வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அதனை வீணடித்தது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.

Next Story