கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பிரிஸ்பேனில் வரலாறு படைக்குமா இந்திய அணி? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் + "||" + Cricket series against Australia Indian team The last Test starts tomorrow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பிரிஸ்பேனில் வரலாறு படைக்குமா இந்திய அணி? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: பிரிஸ்பேனில் வரலாறு படைக்குமா இந்திய அணி? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

அடிலெய்டு டெஸ்டில் வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி மெல்போர்னில் எழுச்சி பெற்றதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இத்தனைக்கும் உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இல்லாமலேயே சாதித்து காட்டியது.

சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய ஒரு கட்டத்தில் நெருக்கடியில் தவித்த போது 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அஸ்வினும், ஹனுமா விஹாரியும் காயத்தையும் பொருட்படுத்தாமல் கூட்டாக 256 பந்துகள் தாக்குப்பிடித்ததுடன் அணியை தோல்வியில் இருந்தும் காப்பாற்றினர்.

இப்போது இந்திய அணிக்கு தலைவலி என்னவென்றால் நிறைய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது தான். அடிவயிற்றில் வலியால் அவதிப்படும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி டெஸ்டில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இதே போல் பந்து தாக்கி கைபெருவிரலில் எலும்பு முறிவுக்குள்ளான ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே கடைசி டெஸ்டில் இருந்து விலகி விட்டார். இதே போல் காலில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஹனுமா விஹாரியும் விளையாட வாய்ப்பில்லை.

இதனால் இந்திய அணி கொஞ்சம் பலவீனமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கும் சூழல் கனிந்துள்ளது. முதுகுவலி பிரச்சினையில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உடல்தகுதியை எட்டாவிட்டால் குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவார். பொதுவாக பிரிஸ்பேன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. பந்து நன்கு ஸ்விங்கும், பவுன்சும் ஆகும். இதனால் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் ராசியானதாகும். இங்கு அந்த அணி கடந்த 32 ஆண்டுகளாக டெஸ்டில் தோற்றதில்லை. அதாவது 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 31 டெஸ்டுகளில் விளையாடி அதில் 24-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்திய அணி டெஸ்டில் வெற்றி பெறாத ஒரே இடம் பிரிஸ்பேன் தான். இந்தியா மட்டுமல்ல, எந்த ஆசிய அணியும் இந்த மைதானத்தில் ஜெயித்தது கிடையாது. இங்கு இந்திய அணி இதுவரை 6 டெஸ்டுகளில் விளையாடி 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவின் வெற்றி கோட்டையான பிரிஸ்பேனில் அவர்களின் ஆதிக்கத்தை இந்தியா தகர்த்து புதிய சரித்திரம் படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதில் ‘டிரா’ செய்தாலே இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சிட்னியில் நிறைய கசப்பான அனுபவங்களை சந்தித்தது. அந்த நாட்டு ரசிகர்கள் இந்திய வீரர்களை இனவெறியுடன் திட்டியது, அஸ்வினை அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தது, ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்வதற்கு ஸ்டம்பு முன் உருவாக்கிய அடையாளத்தை (பேட்டிங் கார்டு) ஸ்டீவன் சுமித் அழிக்க முயற்சித்தது இப்படி பலவிதமான சர்ச்சைகளில் சிக்கியது. இவற்றை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு டெஸ்டில் முத்திரை பதிக்கும் முனைப்புடன் அந்த அணி தயாராகி வருகிறது. இங்குள்ள சூழல் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இவர்களின் தாக்குதலை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதை பொறுத்தே இந்த டெஸ்டின் முடிவு அமையும்.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு இது 100-வது டெஸ்டாகும். 33 வயதான லயன் டெஸ்டில் இதுவரை 396 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 4 விக்கெட் எடுத்தால் 400 விக்கெட் மைல்கல்லை எட்டும் 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

தொடக்க ஆட்டக்காரர் வில் புகோவ்ஸ்கி 3-வது டெஸ்டில் பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது தோள்பட்டையில் காயமடைந்தார். காயத்தில் இருந்து அவர் தேறாவிட்டால் அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்தார். ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், டேவிட் வார்னர் ஆகிய பேட்ஸ்மேன்கள் தான் ஆஸ்திரேலியாவின் தூணாகும். இவர்களை சீக்கிரம் காலி செய்தால் இந்திய அணி வீறுநடை போடலாம். இவ்விரு அணிகளில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, அஜிங்யா ரஹானே (கேப்டன்), ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் அல்லது பிரித்வி ஷா, அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், புகோவ்ஸ்கி அல்லது மார்கஸ் ஹாரிஸ், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.