கிரிக்கெட்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் + "||" + Natarajan, Washington Sundar added pride to Tamil Nadu during the Pongal festival

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தங்களது முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1 ரன்), மார்கஸ் ஹாரிஸ்(5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.