இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து சாதனை


இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து சாதனை
x
தினத்தந்தி 16 Jan 2021 11:59 PM GMT (Updated: 16 Jan 2021 11:59 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

காலே, 

இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 135 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல்இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மழை பாதிப்புக்கு இடையே நடந்த 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 168 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஜோ ரூட் 177 ரன்களை எட்டிய போது டெஸ்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 7-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். அபாரமாக ஆடிய அவர் பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து தனது 4-வது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். ஆசிய கண்டத்தில் இரட்டை சதம் விளாசிய 5-வது இங்கிலாந்து வீரர், இலங்கை மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகளை ஜோ ரூட் தன்வசப்படுத்தினார். நங்கூரம் போல் நிலைகொண்டு விளையாடி அணியின் ஸ்கோர் 400 ரன்களை தாண்ட வைத்த ஜோ ரூட் கடைசி விக்கெட்டாக 228 ரன்களில் (321 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். முன்னதாக ஜோஸ் பட்லர் 30 ரன்னில் வீழ்ந்தார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 421 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளும், எம்புல்டெனியா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடியது. குசல் பெரேரா- திரிமன்னே ஜோடியினர் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்து அருமையான தொடக்கம் தந்தனர். குசல் பெரேரா 62 ரன்னிலும், அடுத்து வந்த குசல் மென்டிஸ் 15 ரன்னிலும் வெளியேறினர். நேற்றைய முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 61 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. திரிமன்னே (76 ரன்), எம்புல்டெனியா (0) களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 130 ரன்கள் எடுக்க வேண்டி இருப்பதால், தற்போதைய சூழலில் இங்கிலாந்தின் கையே வலுவாக ஓங்கி நிற்கிறது. இன்றைய 4-வது நாளில் முழுமையாக தாக்குப்பிடித்தால் இலங்கை அணி தோல்வியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உருவாகும்.


Next Story