இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆல்-அவுட்


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 17 Jan 2021 12:12 AM GMT (Updated: 17 Jan 2021 12:12 AM GMT)

இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்னில் ஆட்டமிழந்தது. கடைசி பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.

பிரிஸ்பேன், 

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் லபுஸ்சேனின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் (28 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (38 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. நடராஜன் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரியுடன் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 311 ரன்களை எட்டிய போது 6-வது விக்கெட்டை இழந்தது. டிம் பெய்ன் (50 ரன்), ஷர்துல் தாகூர் வீசிய ‘அவுட்ஸ்விங்’கரில் ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் சிக்கினார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் கேமரூன் கிரீன் (47 ரன்) கிளீன் போல்டு ஆனார். இருப்பினும் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களான மிட்செல் ஸ்டார்க் (20 ரன்), நாதன் லயன் (24 ரன்) இருவரும் கணிசமான பங்களிப்பை அளித்து அணியின் ஸ்கோர் 350 ரன்களை கடக்க வைத்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முந்தைய நாள் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நேற்று களம் காணவில்லை.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. சுப்மான் கில் (7 ரன்) கம்மின்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற சுமித்திடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார்.

நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா (44 ரன், 74 பந்து, 6 பவுண்டரி) அவசரப்பட்டு நாதன் லயனின் சுழற்பந்து வீச்சை கிரீசை விட்டு இறங்கி வந்து தூக்கியடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை ‘லாங்-ஆன்’ திசையில் மிட்செல் ஸ்டார்க் கேட்ச் செய்தார். 100-வது டெஸ்டில் ஆடும் லயன் சாய்த்த 397-வது விக்கெட் இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் லயனின் சுழல் வலையில் ரோகித் சர்மா சிக்குவது இது 6-வது முறையாகும். ரோகித் சர்மாவின் விக்கெட்டை அதிகமுறை வீழ்த்தியவர் லயன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து புஜாராவும், கேப்டன் அஜிங்யா ரஹானேவும் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 26 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. மழையால் கிட்டத்தட்ட 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 3 நாள் ஆட்டங்களும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4-வது மற்றும் 5-வது நாள் ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி 35 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரஹானே 19 ரன்களும், புஜாரா 18 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.


Next Story