தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி


தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி
x
தினத்தந்தி 18 Jan 2021 12:10 AM GMT (Updated: 18 Jan 2021 12:10 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரைசதத்தால் சரிவை சமாளித்த இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

பிரிஸ்பேன், 

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8 ரன்), கேப்டன் அஜிங்யா ரஹானே (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஓரளவு நிலைத்து நின்று இரட்டை இலக்கத்தை தொட்ட இந்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் அதை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். புஜாரா 25 ரன்னில் (94 பந்து, 2 பவுண்டரி) ஹேசில்வுட் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அது பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் சிக்கியது. அதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. கேப்டன் ரஹானே 37 ரன்னிலும், மயங்க் அகர்வால் 38 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 23 ரன்னிலும் வெளியேறினர். அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 186 ரன்களுடன் தத்தளித்ததுடன், ஆஸ்திரேலியா அதிக ரன்கள் முன்னிலை பெறும் சூழல் தென்பட்டது.

இந்த இக்கட்டான நிலைமையில் ஆல்-ரவுண்டர்கள், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகூரும் கைகோர்த்து ஆஸ்திரேலியாவின் உற்சாகத்தை சீர்குலைத்தனர். ஆஸ்திரேலியாவின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலை அருமையாக சமாளித்த இவர்கள் அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். ஏதுவான பந்துகளை தண்டிக்கவும் தவறவில்லை. ஸ்டார்க், கம்மின்ஸ் ஓவர்களில் சர்வ சாதாரணமாக பவுண்டரிகளை விரட்டினர். ஒரு சில சமயம் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எகிறிய போதிலும் அதிர்ஷ்டவசமாக கேட்ச்சாக மாறவில்லை.

ஷர்துர் தாகூர், லயனின் பந்து வீச்சில் சிக்சர் பறக்க விட்டு முதலாவது அரைசதத்தை கடந்து அசத்தினார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தரும் முதலாவது அரைசதத்தை சுவைத்தார். லயனின் பந்து வீச்சில் சுந்தர் அடித்த ஒரு சிக்சர் அனைவரையும் கவர்ந்தது. அதாவது முட்டிப்போட்டு பந்தை விளாசிய போது அவர் பந்து எங்கு போகிறது என்பதை திரும்பி பார்க்காமல் தரையை நோக்கியபடி இருந்தது வித்தியாசமாக தெரிந்தது.

ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 309 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்களில் (115 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கம்மின்ஸ் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். 36 ஓவர்கள் தாக்குப்பிடித்த இவர்கள் 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களில் (144 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) மிட்செல் ஸ்டார்க் சற்று ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை அப்படியே திருப்பிவிட்ட போது ‘கல்லி’ திசையில் நின்ற கேமரூன் கிரீனிடம் கேட்ச்சாக விழுந்தது.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 111.4 ஓவர்களில் 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து மொத்தம் 54 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 15 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 32 ரன்களுடனும், மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்னுடனும் அவுட் ஆகாமல் விளையாடி வருகின்றனர். 

கடைசி இரு நாட்களில் மழை ஆபத்து உள்ளதால் ஆஸ்திரேலியா இன்றைய 4-வது நாளில் முடிந்தவரை வேகமாக ரன்கள் குவித்து விட்டு இந்தியாவுக்கு இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர் சாதனை

* இந்த டெஸ்டில் இந்தியாவின் ஷர்துல் தாகூரும், வாஷிங்டன் சுந்தரும் 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். வெளிநாட்டு மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைப்பது இது 18-வது நிகழ்வாகும். ஆஸ்திரேலிய மண்ணில் 4-வது முறையாக இச்சாதனையை இந்திய ஜோடி செய்திருக்கிறது.

* அறிமுக டெஸ்டிலேயே அரைசதத்துடன், 3 விக்கெட் எடுத்த 5-வது இந்தியர் என்ற சிறப்பை தமிழகத்தை சேர்ந்த 21 வயதான வாஷிங்டன் சுந்தர் பெற்றார். இதற்கு முன்பு ஹனுமா விஹாரி, சவுரவ் கங்குலி, டட்டு பட்கர், அமர்சிங் ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.

Next Story