பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்


பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2021 12:12 AM GMT (Updated: 20 Jan 2021 12:12 AM GMT)

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.

பிரிஸ்பேன், 

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தன. அடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு ஆட்டமிழந்து 328 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சவால்மிக்க இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று அரங்கேறியது. மேற்கொண்டு 98.1 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டிய நெருக்கடியுடன் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரோகித் சர்மா 7 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அடுத்து ‘பொறுமையின் சிகரம்’ புஜாரா வந்து வழக்கம் போல் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 38 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்திருந்ததை பார்த்த போது ‘டிரா’வை நோக்கி ஆடுவது போல் தோன்றியது.

கில் அதிரடி

அதன் பிறகு சுப்மான் கில் விசுவரூபம் எடுத்தார். ‘இளம்கன்று பயமறியாது’ என்பது போல் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நொறுக்கினார். ஷாட்பிட்ச் பந்துகளை சிரமமின்றி சர்வசாதாரணமாக எல்லைக்கோட்டுக்கு துரத்தினார். மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் சிக்சர், 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு, அவரின் உத்வேகத்தை சீர்குலைத்தார். இதனால் ரன்ரேட் 3 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்தது.

மறுமுனையில் முதல் பவுண்டரிக்கே 103 பந்துகளை செலவிட்ட புஜாரா அவசரப்பட்டு விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டார். ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் அசுரத்தனமான ஷாட்பிட்ச் பந்துகள் அவரது உடலையும், ஹெல்மெட்டையும் நிறைய தடவை பதம் பார்த்தன. ஹேசில்வுட் வீசிய ஒரு பந்து புஜாராவின் கைவிரலில் பட்டு வலியால் துடித்து போனார். பந்து கண்ணுக்கு தெரியவில்லையா? என்று ஹேசில்வுட் சீண்டிப் பார்த்தார். ஆனாலும் அசராமல் ‘சுவர்’ போல் அணியை தாங்கிப்பிடித்து மல்லுகட்டினார்.

அணியின் ஸ்கோர் 132 ஆக உயர்ந்த போது சுப்மான் கில் 91 ரன்களில் (146 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) லயனின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற சுமித்திடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த கேப்டன் அஜிங்யா ரஹானே (24 ரன், 22 பந்து) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கம்மின்ஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்தை உடலை பின்பக்கம் வளைத்தபடி தட்டிவிட முயன்ற போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச்சாக புகுந்தது.

ரிஷாப் பண்ட் கலக்கல்

இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் நுழைந்தார். சிறிது நேரம் நிதானமாக ஆடிய அவர் 16 ரன்னில் இருந்த போது அதிர்ஷ்டவசமாக ‘ஸ்டம்பிங்’ கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக ஆக்ரோஷ பாணியை கையில் எடுத்து அதிர வைத்தார். அவரது அழகான ‘கவர்டிரைவ்’ ஷாட்டுகள் ரசிக்க வைத்தன. இன்னொரு பக்கம் புஜாரா 196 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். டெஸ்டில் அவரது மந்தமான அரைசதம் இது தான். புதிய பந்து எடுக்கப்பட்டதும் புஜாரா 56 ரன்களில் (211 பந்து, 7 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால் (9) ஏமாற்றினார்.

ஆனாலும் ரிஷாப் பண்ட் களத்தில் நின்றதால் நம்பிக்கை தளரவில்லை. அவருக்கு தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நன்கு ஒத்துழைப்பு தந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பீல்டிங் வியூகத்தை அடிக்கடி மாற்றி அமைத்தார். இதனால் கடைசி கட்டத்தில் பரபரப்பான சூழல் உருவானது. பண்ட்டின் விக்கெட்டை கபளீகரம் செய்து விட்டால் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஆவேசமாக தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறவில்லை.

இதற்கிடையே, கம்மின்சின் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசியது நெருக்கடியை தணிக்க உதவியது. வெற்றிக்கு 10 ரன் தேவையாக இருந்த சமயத்தில் வாஷிங்டன் சுந்தர் (22 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) லயனின் பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ முறையில் அடிக்க முயற்சித்து போல்டு ஆனார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் (2 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். இறுதியில் ரிஷாப் பண்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 3 ஓவர் மீதம் வைத்து இலக்கை எட்ட வைத்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 97 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இதன் மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி இந்தியா புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக 300-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) பிரமிப்பூட்டியது. அத்துடன் பிரிஸ்பேனில் 250-க்கும் மேலான இலக்கை வெற்றிகரமாக அடைந்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. ஹீரோவாக மின்னிய ரிஷாப் பண்ட் 89 ரன்களுடன் (138 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டை இந்தியா போராடி டிரா செய்திருந்தது. இந்திய வீரர் ரிஷாப் பண்ட் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

கடைசி நாளில் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. போட்டியின் போது லேசாக மழை துளிகள் விழுந்தன. ஆனால் உடனடியாக மழை நின்று விட்டதால் ஆட்டத்தில் பாதிப்பு இல்லை. இந்த வகையில் இந்தியாவின் வெற்றிக்கு வருணபகவானும் துணை நின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரை தலா 2-1 என்ற கணக்கில் வென்று தித்திப்பான நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறது.

ஆஸ்திரேலியாவின் கோட்டை தகர்ந்தது

ஆஸ்திரேலியாவின் ‘வெற்றி கோட்டை’ என்று அழைக்கப்படும் பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இந்திய அணி முதல்முறையாக வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. இதற்கு முன்பு இந்திய அணி இங்கு ஆடிய 6 டெஸ்டில் 5-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. இந்த மைதானத்தில் வெற்றிக்கனியை பறித்த முதல் ஆசிய அணி இந்தியா தான். பாகிஸ்தான் (6 டெஸ்டில் 5 தோல்வி, ஒரு டிரா) இலங்கை (2 தோல்வி, ஒரு டிரா) அணிகள் இங்கு வெற்றி பெற்றதில்லை. ஆஸ்திரேலிய அணி 1988-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது கடந்த 32 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தது. இந்த காலக்கட்டத்தில் அந்த அணி 24 டெஸ்டில் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டு இருந்தது. இப்போது அவர்களது ‘வெற்றி கோட்டை’ இந்திய இளம் படையால் தகர்க்கப்பட்டு விட்டது.



 


கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய வீரர்கள்

இந்திய அணி அடிலெய்டில் நடந்த பகல்-இரவு முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான ஸ்கோராக பதிவானது. அந்த டெஸ்டுடன் இந்திய கேப்டன் விராட் கோலி குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பினார். ‘இனி இந்தியா கதை அவ்வளவு தான். எழுச்சி பெற வாய்ப்பே இல்லை, தொடரை 0-4 என்ற கணக்கில் இழப்பது உறுதி’ என்று ஷேன் வார்னே, மார்க் வாக், மைக்கேல் கிளார்க் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சன கணைகளை அள்ளி வீசினர். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் இதே கருத்தை பிரதிபலித்தார். ஆனால் அவர்களின் ஆரூடத்தை எல்லாம் பொய்யாக்கி இந்திய வீரர்கள் கரியை பூசி விட்டனர்.

இத்தனைக்கும் பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. துளியும் அனுபவமில்லாத பந்து வீச்சை கொண்டு தான் இந்தியா களம் காண வேண்டி இருந்தது. அனுபவத்தை ஒப்பிடும் போது, ஆஸ்திரேலிய லெவன் அணியினர் எடுத்த மொத்த விக்கெட் எண்ணிக்கை 1033. இந்தியாவின் 11 வீரர்களும் சேர்ந்து எடுத்த விக்கெட் எண்ணிக்கை 13. அனுபவம் இல்லாத பவுலர்கள் என்ற போதிலும் இரண்டு இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் செய்தது இன்னொரு ஹைலெட்ஸ்சான விஷயமாகும்.



 


இந்திய அணிக்கு மோடி, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஹானே சாதனை

*இந்திய அணி இதுவரை ரஹானே தலைமையில் 5 டெஸ்டுகளில் விளையாடி 4-ல் வெற்றியும், 1-ல் டிராவும் கண்டுள்ளது. முதல் 5 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து தோல்வியே சந்திக்காத ஒரே இந்திய கேப்டன் ரஹானே தான்.

*இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஒரு ரன் எடுத்த போது டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். இதுவரை 27 இன்னிங்சில் 1,088 ரன்கள் சேர்த்துள்ள அவர் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்றார்.

*டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்று அதன் பிறகு தொடரை உச்சிமுகர்வது இது 5-வது நிகழ்வாகும்.

இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் சாய்த்து டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்ன ஒரு அற்புதமான வெற்றி. ஆஸ்திரேலியாவுக்கு சென்று இப்படிப்பட்ட தொடர் வெற்றியை பெற்றிருப்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும். சாதனை படைத்த இந்திய அணிக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.5 கோடி போனசாக வழங்கப்படும். இந்த வெற்றியின் மதிப்பு எண்ணிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story