கிரிக்கெட்

‘தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான்’ - வார்னர் புகழாரம் + "||" + ‘Tamil Nadu player Natarajan is a hero’ - Warner praise

‘தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான்’ - வார்னர் புகழாரம்

‘தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான்’ - வார்னர் புகழாரம்
‘வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான தமிழகத்தின் நடராஜனை ஒரு ஜாம்பவான்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிட்னி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் தலைமையில் விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்த ஐ.பி.எல். சீசனில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். அது மட்டுமின்றி அந்த ஐ.பி.எல்.-ல் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதுடன் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்திரை பதித்தார். அவருக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் முதலில் ‘வாழ்த்துகள் நட்டு’, என்று தமிழில் பேசியுள்ள வார்னர் அதன் பிறகு, ‘நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் வார்னர் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் சிலாகித்து போய் உள்ளார். மேளம் தாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷேவாக், ‘இது தான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டல்ல. அதற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. நடராஜன் சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.