இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி 381 ரன் குவித்து ஆல்-அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி 381 ரன் குவித்து ஆல்-அவுட்
x
தினத்தந்தி 24 Jan 2021 12:44 AM GMT (Updated: 24 Jan 2021 12:44 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை அணி 381 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

காலே,

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 107 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். 2-வது ஓவரிலேயே மேத்யூஸ் (110 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். முதலில் நடுவர் அவுட் வழங்கவில்லை. டி.ஆர்.எஸ்.-ன் படி அப்பீல் செய்த போது பந்து பேட்டில் லேசாக உரசியது தெரிய வந்ததால் நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டது. அடுத்து வந்த புதுமுக வீரர் ரமேஷ் மென்டிஸ் டக்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து டிக்வெல்லாவும், தில்ருவான் பெரேராவும் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை 300 ரன்களை கடக்க வைத்தனர். தனது ‘கன்னி’ சதத்தை நெருங்கிய டிக்வெல்லா (92 ரன், 144 பந்து, 10 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக 8 ரன்னில் தவற விட்டார். ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஜாக் லீச்சிடம் பிடிபட்டு வெளியேறினார். மறுமுனையில் அரைசதத்தை கடந்த தில்ருவான் பெரேரா (67 ரன், 170 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தேனீர் இடைவேளைக்கு முன்பாக இலங்கை அணி முதல் இன்னிங்சில் 139.3 ஓவர்களில் 381 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் துல்லியமாக பந்து வீசி மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் 29 ஓவர்கள் பந்து வீசி 13 மெய்டனுடன் 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்னிங்சில் அவர் 5-க்கு மேல் விக்கெட் வீழ்த்துவது இது 30-வது முறையாகும். அத்துடன் ஆசிய மண்ணில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது பதிவானது. மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான மார்க்வுட் 3 விக்கெட்டும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். முந்தைய டெஸ்டில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச், டாம் பெஸ் இருவருக்கும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் 4 ஓவர்களில் ரன்னே எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் சிப்லி (0), ஜாக் கிராவ்லி (5 ரன்) இருவரும் எம்புல்டெனியாவின் சுழலில் சிக்கினர்.

இதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோவும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் 67 ரன்களுடனும் (77 பந்து, 10 பவுண்டரி), பேர்ஸ்டோ 24 ரன்களுடனும் (65 பந்து, 4 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்னும் 283 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இங்கிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தில் விளையாடும்.

Next Story