இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 186 ரன் விளாசினார்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 186 ரன் விளாசினார்
x
தினத்தந்தி 25 Jan 2021 1:07 AM GMT (Updated: 25 Jan 2021 1:07 AM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் விளாசினார்.

காலே,

இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 381 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 67 ரன்னுடனும், ஜானி பேர்ஸ்டோ 24 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இலங்கை, முதல் ஓவரில் இருந்தே சுழல் தாக்குதலை அதிகமாக தொடுத்து நெருக்கடி கொடுத்தது. பேர்ஸ்டோ 28 ரன்னிலும், டேன் லாரன்ஸ் 3 ரன்னிலும் லசித் எம்புல்டெனியாவின் சுழற்பந்தில் வீழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜோ ரூட்டுடன், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க உதவினார். அபாரமாக ஆடிய ஜோ ரூட் தனது 19-வது சதத்தை நிறைவு செய்தார். இலங்கையில் அவரது 3-வது சதமாகும். இதன் மூலம் இலங்கை மண்ணில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

அணியின் ஸ்கோர் 229 ரன்களாக உயர்ந்த போது பட்லர் (55 ரன்) புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிசின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சாம் கர்ரன் (13 ரன்) நிலைக்கவில்லை. இதனால் மறுபடியும் இங்கிலாந்து அணி தடுமாற்றத்துக்கு உள்ளானது. இருப்பினும் ஒரு பக்கம் ஜோ ரூட் தூண் போல் நிலைகொண்டு மட்டையை சுழட்டினார். 7-வது விக்கெட்டுக்கு வந்த டாம் பெஸ் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க அந்த அணி ஒரு வழியாக 300 ரன்களை கடந்தது. டாம் பெஸ் தனது பங்குக்கு 32 ரன்கள் (95 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் வெளியேறினார். அணியை தனி வீரராக தூக்கி நிறுத்திய ஜோ ரூட் 186 ரன்களில் (309 பந்து, 18 பவுண்டரி) ஆட்டமிழந்தார். பந்தை தட்டிவிட்டு சில அடி ஜோ ரூட் நகர்ந்த போது, அதற்குள் ஷாட்லெக்கில் பந்தை பீல்டிங் செய்த ஒஷாடா பெர்னாண்டோ ஸ்டம்பு மீது எறிந்து ரன்-அவுட் செய்து விட்டார். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணி 114.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா 7 விக்கெட்டுகளை அள்ளினார். திரிமன்னே 5 கேட்ச் செய்தார். ஒரு இன்னிங்சில் 5 கேட்ச் செய்த முதல் இலங்கை பீல்டர் என்ற பெருமையை அவர் பெற்றார். இங்கிலாந்து இன்னும் 42 ரன் பின்தங்கி இருப்பதால் இந்த டெஸ்டில் இலங்கையின் கை சற்று ஓங்கியுள்ளது என்று சொல்லலாம். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

‘முதல் இரு நாட்களுடன் ஒப்பிடும் போது பந்து இப்போது நன்கு சுழன்று திரும்ப தொடங்கி விட்டது. அவர்களது கடைசி விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்தி விட்டு அதன் பிறகு 150 முதல் 200 ரன்கள் முன்னிலை பெற்றாலே ஆட்டம் எங்களது கைக்கு வந்து விடும்’ என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா கூறினார்.

Next Story