கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது + "||" + England win last Test against Sri Lanka; Captured the series as well

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.
கடைசி டெஸ்ட்
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்து இருந்தது. ஜாக் லீச் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே ஜாக் லீச் (1 ரன்) தில்ருவான் பெரேரா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்களில் 344 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 186 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்டெனியா 7 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா, ரமேஷ் மென்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

விக்கெட்டுகள் சரிவு
இதனை அடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச், டாம் பெஸ் ஆகியோர் இலங்கை அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன் விரைவில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா (14 ரன்) ஜாக் லீச் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து இலங்கை அணியினர் செய்த டி.ஆர்.எஸ். அப்பீலில் பலன் கிடைக்கவில்லை. அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ (3 ரன்) டாம் பெஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே (13 ரன்) ஜாக் லீக் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன் எடுத்த நிலையில் டாம் பெஸ் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களம் கண்ட பொறுப்பு கேப்டன் தினேஷ் சன்டிமால் 9 ரன்னிலும், விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 67 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு தில்ருவான் பெரேரா 4 ரன்னிலும், ரமேஷ் மென்டிஸ் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

126 ரன்னில் சுருண்டது
சற்று நிலைத்து நின்று அடித்து ஆடிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா (40 ரன்கள், 42 பந்துகள், 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை கேப்டன் ஜோ ரூட் தனது சுழற்பந்து வீச்சு மூலம் வீழ்த்தினார். அவர் கடைசி விக்கெட்டான அசிதா பெர்னாண்டோவையும் (0) காலி செய்தார். தேனீர் இடைவேளைக்கு முன்பு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 35.5 ஓவர்களில் 126 ரன்னில் சுருண்டது. சுரங்கா லக்மல் 11 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் டாம் பெஸ், ஜாக் லீச் தலா 4 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த இன்னிங்சில் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதித்தனர்.

இங்கிலாந்து வெற்றி
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி (13 ரன்) எம்புல்டெனியா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் அடுத்து வந்த பேர்ஸ்டோ (29 ரன்), லாரென்ஸ் (2 ரன்) ஆகியோர் விக்கெட்டையும் வீழ்த்தினார். கேப்டன் ஜோ ரூட் 11 ரன்னில் ரமேஷ் மென்டிஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அந்த அணி 89 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் சிப்லி 144 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 56 ரன்னும், ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 46 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் எம்புல்டெனியா 3 விக்கெட்டும், ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடரை கைப்பற்றியது
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முதலாவது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இந்த போட்டி தொடரில் ஒரு இரட்டை சதம் உள்பட 426 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரை வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி மொத்தம் 120 புள்ளிகளை சொந்தமாக்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. இம்ரான்கானின் பாராளுமன்ற உரையை இலங்கை ரத்து செய்தது ஏன் ?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார்.
2. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது.
3. இலங்கையில் எதிர்ப்பு பேரணி வெற்றி; தமிழ் கட்சிகள் அறிவிப்பு
இலங்கையில் தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு பேரணி வெற்றி பெற்றதாக தமிழ் கட்சிகள் அறிவித்தன.
4. முதல் டெஸ்ட்: ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
5. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: அஸ்வின் அபாரம்; இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு சுருண்டது.