பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: கராச்சியில் இன்று தொடக்கம்


பாபர் அசாம்; குயின்டான் டி காக்
x
பாபர் அசாம்; குயின்டான் டி காக்
தினத்தந்தி 26 Jan 2021 6:02 AM GMT (Updated: 26 Jan 2021 6:02 AM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

 2007-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் சென்று இருப்பது இதுவே முதல்முறையாகும். தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் பாப் டுபிளிஸ்சிஸ், டீன் எல்கர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்ட்ஜேவும், சுழற்பந்து வீச்சில் கேஷவ் மகராஜூம் வலுசேர்ப்பார்கள். இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்துடன் தென்ஆப்பிரிக்க அணி களம் காணும். காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாகும். நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியை மறந்து பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் வெற்றியை பெற மல்லுக்கட்டும். எனவே இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்க அணி 15 ஆட்டத்திலும், பாகிஸ்தான் அணி 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 7 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தன.

Next Story