சென்னையில், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் 18-ந்தேதி நடக்கிறது


சென்னையில், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் 18-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 28 Jan 2021 1:13 AM GMT (Updated: 28 Jan 2021 1:13 AM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 18-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா? அல்லது கடந்த சீசனை போல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையே தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 20-ந்தேதிக்குள் சமர்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் கெடு விதித்திருந்தது. இதையடுத்து 8 அணிகளையும் சேர்த்து மொத்தம் 139 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். 57 வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். ஸ்டீவன் சுமித், கிளைன் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் கேரி, பேட்டின்சன், கிறிஸ் மோரிஸ், காட்ரெல், ஹர்பஜன்சிங், கேதர் ஜாதவ், முரளிவிஜய், பியுஷ் சாவ்லா, கருண் நாயர், உமேஷ் யாதவ், ஷிவம் துபே போன்ற பிரபலமான வீரர்கள் நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் மறுபடியும் ஏலத்திற்கு வர முடியும். பரஸ்பரம் அடிப்படையில் வீரர்களை பரிமாற்றம் செய்ய வருகிற 11-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் 17-ந்தேதி நிறைவடைகிறது. அதற்கு மறுநாள் வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.85 கோடி செலவிட முடியும். தக்க வைத்திருக்கும் வீரர்களின் ஊதியம் போக மீதமுள்ள தொகையை ஏலத்தில் வீரர்களை வாங்க பயன்படுத்தலாம். இதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ.53.2 கோடி கையிருப்பு வைத்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ரூ.35.9 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.34.85 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.22.9 கோடி) ஆகிய அணிகளும் கணிசமான தொகையை மீதம் வைத்துள்ளன.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (ரூ.15.35 கோடி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (ரூ.12.9 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.10.75 கோடி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (ரூ.10.75 கோடி) ஆகிய அணிகளிடம் தொகை குறைவாக உள்ளன. சென்னை அணி நிர்வாகம் ஒரு வெளிநாட்டவர் உள்பட 7 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். விரைவில் ஏலத்திற்கு வரும் வீரர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

ஏலம் நிகழ்ச்சியில் ஒவ்வொரு அணியின் சார்பில் அதிகபட்சமாக 13 பேர் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அணி உரிமையாளர், நிர்வாகிகளை தனிமைப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏலத்திற்கு முன்பாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தி பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவுடன் வர வேண்டும். அதாவது ஏலத்திற்கு 72 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு முறை சோதனை செய்து அதன் முடிவை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஏலம் நடைபெறும் இடமான சென்னைக்கு வந்ததும் மற்றொரு சோதனை நடத்தப்படும். இது தொடர்பான விவரங்கள் ஒவ்வொரு அணியின் நிர்வாகங்களுக்கும் இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமின் தெரிவித்துள்ளார்.

Next Story