இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர் - முன்னாள் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் பேட்டி


இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர் - முன்னாள் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் பேட்டி
x
தினத்தந்தி 29 Jan 2021 1:00 AM GMT (Updated: 29 Jan 2021 1:00 AM GMT)

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் வீரரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஆன்டி பிளவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து அங்கு வெற்றிக்கு முயற்சிப்பது வேறு. ஆனால் இந்திய மண்ணில் 4 டெஸ்டுகளில் விளையாடுவது முற்றிலும் வேறுவகையிலான சவால் நிறைந்தது. 2012-ம் ஆண்டில் அலஸ்டயர் குக் தலைமையில் இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதை விட இப்போது இங்கிலாந்துக்கு இந்த தொடர் கடினமாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் இந்திய அணி அதீத நம்பிக்கையுடன் இருக்கும். அது மட்டுமின்றி அவர்கள் இப்போது உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் நம்பிக்கைக்குரிய அணியாக திகழ்கிறார்கள். முன்பு போல் சாதிக்க வேண்டும் என்றால் தற்போதைய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாட வேண்டியது முக்கியம். அப்போது தான் மிகப்பெரிய இன்னிங்சை உருவாக்க முடியும். சொல்லப்போனால், 2012-ம் ஆண்டில் அலஸ்டயர் குக் (3 சதம் உள்பட 562 ரன் குவித்தார்) போன்று அவர் ரன் குவிக்க வேண்டும். இதே போல் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக அதாவது 2012-ல் கெவின் பீட்டர்சன் விளையாடியது போன்று செயல்பட வேண்டும். இவ்வாறு விளையாடும் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை நெருக்கடிக்குள்ளாக்க முடியும்.

இவ்வாறு ஆன்டி பிளவர் கூறினார்.

ஆன்டி பிளவர் அளித்த மற்றொரு பேட்டியில், ‘இந்த தொடரில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்பதை முன்கூட்டியே சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த வீரர்களை கொண்டிருக்கிறது. அவர்களால் இந்திய மண்ணில் தடுமாற்றமின்றி விளையாடவோ அல்லது வெற்றிக்குரிய சூழலை உருவாக்கவோ முடியும். போட்டிக்குரிய நாளில் கடினமான வாய்ப்புகளை நட்சத்திர வீரர்கள் எப்படி சாதகமாக மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனித்துவமான திறமையை காட்டும் வியப்புக்குரிய சில வீரர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர்’ என்றார். வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு வந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி தேசத்தில் இந்தியாவும் ஒன்று. இந்தியா போன்ற அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவது கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story