பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா போராட்டம்


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 1:02 AM GMT (Updated: 29 Jan 2021 1:02 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் முன்னிலையை வலுப்படுத்த போராடுகிறது.

கராச்சி,

தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் பவாத் ஆலம் (109 ரன்) அடித்த சதத்தின் உதவியுடன் சரிவில் இருந்து மீண்டது. 2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ஹசன் அலி (11 ரன்), நமன் அலி (6 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று பாகிஸ்தான் அணிக்கு கடைநிலை பேட்ஸ்மேன்கள் அளித்த கணிசமான பங்களிப்பால் ஸ்கோர் எதிர்பார்ப்பையும் மிஞ்சியது. ஹசன் அலி 21 ரன்களும், நமன் அலி 24 ரன்களும், யாசிர் ஷா 38 ரன்களும் (37 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். முடிவில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி மொத்தம் 158 ரன்கள் முன்னிலை பெற்றது.

தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் ஹசன் அலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது அது அவரது 200-வது விக்கெட்டாக (44 டெஸ்ட்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 8-வது தென்ஆப்பிரிக்க வீரர் ஆவார். அத்துடன் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர்களின் வரிசையில் 3-வது இடத்தை பிடித்தார். அவர் இந்த இலக்கை அடைவதற்கு 8,154 பந்துகள் வீசியிருக்கிறார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (7,730 பந்து), தென்ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் (7,848 பந்து) ஆகியோர் உள்ளனர்.

அடுத்து 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் டீன் எல்கர் (29 ரன்) யாசிர் ஷாவின் சுழலில் கொடுத்த வாய்ப்பை விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பாய்ந்து கேட்ச் செய்தார்.

இதைத் தொடர்ந்து எய்டன் மார்க்ராமும், வான்டெர் துஸ்செனும் கைகோர்த்து அணியை நெருக்கடியில் இருந்து ஓரளவு மீட்டனர். அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டனர். அணியின் ஸ்கோர் 175 ரன்களாக உயர்ந்த போது, வான்டெர் துஸ்சென் 64 ரன்களில் (151 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், மார்க்ராம் 74 ரன்னிலும் (224 பந்து, 10 பவுண்டரி) வெளியேற தென்ஆப்பிரிக்கா மீண்டும் சிக்கலுக்குள்ளானது.

3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 75 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்களுடன் போராடிக்கொண்டிருந்தது. கேஷவ் மகராஜ் (2 ரன்), கேப்டன் குயின்டான் டி காக் (0) களத்தில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தற்போதைய நிலைமையில் தென்ஆப்பிரிக்கா 29 ரன் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. இன்றைய 4-வது நாளில் தேனீர் இடைவேளை வரை தாக்குப்பிடித்தால் பாகிஸ்தானுக்கு சற்று சவாலான இலக்கை நிர்ணயிக்கலாம். இல்லாவிட்டால் பாகிஸ்தானின் பிடி இறுகிவிடும்.

Next Story