முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்


முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்
x
தினத்தந்தி 29 Jan 2021 1:10 AM GMT (Updated: 29 Jan 2021 1:10 AM GMT)

முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு-ராஜஸ்தான், பஞ்சாப்-பரோடா அணிகள் மோதுகின்றன.

ஆமதாபாத்,

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, அசோக் மெனரியா தலைமையிலான ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது.

முன்னாள் சாம்பியனான தமிழக அணி தனது பிரிவில் 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்ததுடன், கால்இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இமாச்சலபிரதேசத்தை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் என். ஜெகதீசன் (322 ரன்கள்), தினேஷ் கார்த்திக், அருண் கார்த்திக், பாபா அபராஜித், ஹரி நிஷாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களும், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சோனு யாதவ், சந்தீப் வாரியர் போன்ற தரம் வாய்ந்த பவுலர்களும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அங்கித் லம்பா (198 ரன்கள்), மஹிபால் லோம்ரோர் (170 ரன்கள்), பவுலிங்கில் ராகுல் சாஹர் (11 விக்கெட்), ரவி பிஷ்னோய் (10 விக்கெட்), கலீல் அகமது, அங்கித் சவுத்ரி ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் வலுவான தமிழக அணிக்கு, ராஜஸ்தான் சவாலாக விளங்கும் என்பதால் இந்த போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7 மணிக்கு நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் பஞ்சாப்-பரோடா அணிகள் மோதுகின்றன. மன்தீப் சிங் தலைமையிலான பஞ்சாப் அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியதுடன், கால்இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவை வெளியேற்றி அசத்தியது.

பரோடா அணி பேட்டிங்கில் கேப்டன் கேதர் தேவ்தார், விஷ்ணு சோலங்கி ஆகியோரையே மலைபோல் நம்பி இருக்கிறது. அவர்கள் ஜொலிக்க தவறினால் அந்த அணி பலம் வாய்ந்த பஞ்சாப்பை பஞ்சராக்குவது கடினம் தான்.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story