கிரிக்கெட்

முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இங்கிலாந்து அணியுடன் பேர்ஸ்டோ இணைவார் - பேட்டிங் பயிற்சியாளர் தகவல் + "||" + Barstow will join England after the first Test - Batting Coach Info

முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இங்கிலாந்து அணியுடன் பேர்ஸ்டோ இணைவார் - பேட்டிங் பயிற்சியாளர் தகவல்

முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இங்கிலாந்து அணியுடன் பேர்ஸ்டோ இணைவார் - பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இங்கிலாந்து அணியுடன் பேர்ஸ்டோ இணைவார் என பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் அறிவித்தார்.
சென்னை,

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இடம்பெறவில்லை. சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது முட்டாள்தனமான முடிவு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன், நாசர் ஹூசைன், பீட்டர்சன் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப்பிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். காணொலி மூலம் பேட்டி அளித்த கிரஹாம் தோர்ப் கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முடிந்ததும் பேர்ஸ்டோ இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொள்வார். 2-வது டெஸ்டுக்கான அணித் தேர்வுக்கு அவர் தயாராக இருப்பார்’ என்று அறிவித்தார்.

வருகிற 5-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெறுகிறார். இது குறித்து தோர்ப் கூறுகையில், ‘100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது எளிதான விஷயம் அல்ல. இதற்கு நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதுடன், ஜாலியான மனநிலையுடன் ஆடுவது அவசியம். உண்மையிலேயே இது பெரிய சாதனை தான். இதனால் ஜோ ரூட்டும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த பெருமிதம் கொள்வார்கள். ஜோ ரூட் எப்போதும் பணிவானவர். கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த ஒரு மாணவர். கற்றுக்கொள்வது அவருக்கு பிடிக்கும். மற்ற வீரர்கள் விளையாடுவதை பார்க்கவும் விரும்புவார். ஓய்ந்து விடாமல் தொடர்ந்து ரன்குவிக்கும் வேட்கையுடன் உள்ள வீரர்களில் அவரும் ஒருவர்’ என்று புகழாரம் சூட்டினார்.

‘இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை எடுத்துக் கொண்டால், வெறும் சுழற்பந்து வீச்சை மட்டும் குறிப்பிட முடியாது. அவர்களின் வேகப்பந்து வீச்சும் இப்போது வலுவாக இருப்பதை அறிவோம். எனவே சுழல் மட்டுமின்றி வேகப்பந்து வீச்சு மீதும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்’ என்று மற்றொரு கேள்விக்கு தோர்ப் பதில் அளித்தார்.