கிரிக்கெட்

முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி - பாகிஸ்தான் அணி அபார வெற்றி + "||" + Defeats South Africa in First Test - Pakistan won the toss and elected to bat

முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி - பாகிஸ்தான் அணி அபார வெற்றி

முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி - பாகிஸ்தான் அணி அபார வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கராச்சி, 

பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 220 ரன்களும், பாகிஸ்தான் 378 ரன்களும் எடுத்தன. அடுத்து 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் குயின்டான் டி காக் (0), கேஷவ் மகராஜ் (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தானின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். பின்வரிசையில் டெம்பா பவுமா (40 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் டி காக், கேஷவ் மகராஜ் இருவரும் தலா 2 ரன்னில் வீழ்ந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 100.3 ஓவர்களில் 245 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 70 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அறிமுக இடக்கை சுழற்பந்து வீச்சாளரான நமன் அலி 5 விக்கெட்டுகளும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அத்துடன் அறிமுக டெஸ்டிலேயே அதிக வயதில் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனையை 34 வயதான நமன் அலி வசப்படுத்தினார்.

பின்னர் பாகிஸ்தானுக்கு 88 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசார் அலி 31 ரன்களும் (நாட்-அவுட்) கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும் எடுத்து வெற்றியை சுலபமாக்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பவாத் ஆலம் ஆட்டநாயகன் விருது பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 60 புள்ளிகளை தட்டிச் சென்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், ‘மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் முதலில் பந்து வீசும் நிலைமை ஏற்பட்டதால் திட்டங்களை மாற்ற வேண்டியதாகி விட்டது. முதல் இன்னிங்சில் 36 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பவாத் ஆலமும், அசார் அலியும் அணியை மீட்டெடுத்தனர். இங்கு அவர்களது அனுபவம் பளிச்சிட்டது. பவாத் ஆலமின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. நமன் அலி, யாசிர் ஷாவின் பந்து வீச்சு அருமை. இதே போல் பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் எல்லா சிறப்பும் வீரர்களையே சாரும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் குயின்டான் டி காக் கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது. அது தான் எங்களது தோல்விக்கு காரணம். எங்களது ஆட்டஅணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை. இங்கு போதுமான அளவுக்கு பயிற்சி பெற்றிருக்கிறோம். ஆனால் விக்கெட்டுகளை மிக சாதாரணமாக இழந்து விட்டோம். அதே சமயம் எங்களது பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷத்துடன் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினர். பாகிஸ்தான் எங்களை விட பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டது அவ்வளவு தான்’ என்றார்.