கிரிக்கெட்

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Mushtaq Ali Cup Cricket: Tamil Nadu beat Rajasthan to qualify for the final

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆமதாபாத்,

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று பகலில் நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, அசோக் மெனரியா தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எட்டி வலுவான நிலையில் இருந்தது. இதனால் அந்த அணி 190 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் அசோக் மெனரியா (51 ரன், 32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கடைசி 7 ஓவர்களில் அந்த அணி மேலும் 34 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. கேப்டனுக்கு அடுத்து அதிகபட்சமாக அர்ஜித் குப்தா 45 ரன்கள் (35 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமது 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டும், சோனு யாதவ், பாபா அபராஜித், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து 155 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 3.2 ஓவர்களில் 17 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் (4 ரன்) தன்வீர் உல்-ஹக் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த பாபா அபராஜித் 2 ரன்னில் அங்கித் சவுத்ரி பந்து வீச்சில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10-வது ஓவர் வரை தாக்குப்பிடித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் என். ஜெகதீசன் 28 ரன்களில் நடையை கட்டினார். அப்போது அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது.

இந்த நெருக்கடியான சூழலில் கேப்டன் தினேஷ் கார்த்திக், அருண் கார்த்திக்குடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று அடித்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. சில ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தான் அணியினர் கோட்டை விட்டனர். தினேஷ் கார்த்திக் 21 ரன்னிலும், அருண் கார்த்திக் 71 ரன்னிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தனர். பீல்டிங்கில் செய்த பிழை ராஜஸ்தான் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

18.4 ஓவர்களில் தமிழக அணி 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த முறை (2019) தமிழக அணி இறுதிஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோற்று இருந்தது. அருண் கார்த்திக் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்னும், தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 26 ரன்னும் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தனர்

இரவில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் பரோடா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, பரோடாவை சந்திக்கிறது.