இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி முதல்முறையாக ரத்து


இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி முதல்முறையாக ரத்து
x
தினத்தந்தி 30 Jan 2021 8:41 PM GMT (Updated: 30 Jan 2021 8:41 PM GMT)

கொரோனா பிரச்சினையால் முதல்முறையாக இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ரஞ்சி போட்டி இல்லை
இந்தியாவில் ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த சீசனில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இதில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் கோப்பையை முதல்முறையாக உச்சிமுகர்ந்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த சீசனில் (2020-21) நடத்துவதில் சிக்கல் உருவானது.

கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முழுமையான பாதுகாப்புடன் நீண்ட நாட்கள் இந்த போட்டியை நடத்துவது என்பது சிரமமான காரியம். அத்துடன் ஏற்கனவே சில மாதங்கள் கடந்து விட்டது.

இது குறித்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசனை கேட்டது. இதில் பெரும்பாலான மாநில சங்க உறுப்பினர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர். அவர்களின் யோசனையை ஏற்று 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விஜய்ஹசாரே நடக்கும்
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘ரஞ்சி கோப்பை போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் (ஆண்கள் 50 ஓவர்), பெண்களுக்கான தேசிய அளவிலான ஒரு நாள் போட்டி மற்றும் வினோ மன்கட் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டி ஆகியவை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

முஷ்டாக் அலி கோப்பை போட்டியை கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி. முஷ்டாக் அலி போட்டிக்கு எந்த மாதிரியான கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே பாதுகாப்பு நடைமுறைகள் விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் தொடரும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடாமல் ஊதியத்தை இழக்கும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story