ஜனவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருதுக்கு ரிஷாப் பண்ட் உள்பட 3 வீரர்களின் பெயர் பரிந்துரை


ஜனவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருதுக்கு ரிஷாப் பண்ட் உள்பட 3 வீரர்களின் பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 3 Feb 2021 12:02 AM GMT (Updated: 3 Feb 2021 12:02 AM GMT)

ஜனவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருதுக்கு ரிஷாப் பண்ட் உள்பட 3 வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்து இருக்கிறது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இனிமேல் மாதந்தோறும் விருது வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் அறிவித்தது. ஜனவரி மாதத்துக்கான விருது இறுதிப்பட்டியலில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் பெயரையும், சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தானின் டயானா பெய்க், தென்ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜானே காப் ஆகியோரின் பெயரையும் ஐ.சி.சி. நேற்று பரிந்துரை செய்து இருக்கிறது. 

ரிஷாப் பண்ட் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்டில் 97 ரன்னும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்னும் விளாசி பிரமிக்க வைத்தார். இதேபோல் ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 228, 186 ரன்கள் குவித்து இருந்தார். பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டியிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் விளையாடி மொத்தம் 3 சதங்கள் அடித்து இருந்தார்.

விருதுக்குரிய தகுதியான வீரரை தேர்வு செய்ய ஐ.சி.சி. வாக்கு அகாடமியை சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்கள், சீனியர் கிரிக்கெட் பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இ-மெயில் மூலம் வாக்களிப்பார்கள். ரசிகர்கள் ஆன்-லைன் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். ரசிகர்களுக்கு 10 சதவீத வாக்களிக்கும் உரிமையும், ஐ.சி.சி. வாக்கு அகாடமியினருக்கு 90 சதவீத வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டு இருக்கிறது. யாருக்கு விருது என்பது இந்த மாதத்தின் 2-வது திங்கட்கிழமையில் அறிவிக்கப்படும்.

Next Story