இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்


இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 4 Feb 2021 11:56 PM GMT (Updated: 4 Feb 2021 11:56 PM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், சுப்மான் கில், ரோகித் சர்மா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் ரஹானேவின் கேப்டன்ஷிப்புக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியதால், கோலி இந்த தொடரை வென்று சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அத்துடன் கடந்த ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காத கோலியின் ரன்வேட்டையை கண்டு ரசிக்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உள்நாட்டில் இந்தியா எப்போதும் பலம்வாய்ந்த அணியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய அணி அதன் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. உள்ளூரில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

சென்னை ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது. கடைசி இரு நாளில் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். அதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதிர்பார்க்கலாம். இதுவரை 17 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய மண்ணில் டெஸ்டில் முதல்முறையாக ஆட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. 30 வயதான ஜோ ரூட் எப்போதும் ஆசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். அவர் தான் இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். இலங்கை தொடரில் கூட 228, 186 ரன் வீதம் விளாசியிருந்தார்.

மேலும், இது அவருக்கு 100-வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 2012-ம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கிய அவர் செஞ்சுரி டெஸ்ட் போட்டியையும் இந்தியாவிலேயே விளையாட இருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெறுகிறார்.

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமைசாலிகள் ஆவர். இந்திய மண்ணில் அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் கணிசமாக ரன்கள் குவிக்க வேண்டும், இந்திய சுழற்பந்து வீச்சு தாக்குதலை தவிடுபொடியாக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களது வியூகங்களை தீட்டியுள்ளர்.

இளம் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி, பயிற்சிக்கு கிளம்புவதற்காக ஓய்வறையை விட்டு வெளியே வந்த போது தவறி விழுந்ததில் வலதுகை மணிக்கட்டு பலமாக கீழே இடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இரு டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்று விட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இந்த தொடரின் மூலம் தெரிய வரும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும். இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது முகமது சிராஜ்.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ்வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் சென்னை டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story