இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:  இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் - ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 5 Feb 2021 10:29 PM GMT (Updated: 5 Feb 2021 10:29 PM GMT)

சென்னையில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. ஜோ ரூட்டின் சதத்தின் உதவியுடன் முதல் நாளில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. கொரோனா பரவலால் ஓராண்டு இடைெவளிக்கு பிறகு இந்தியாவில் அரங்கேறும் முதல் சர்வதேச கிரிக்கெட் இதுவாகும்.

இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளர் அக் ஷர் பட்டேல் பயிற்சியின் போது கால்முட்டியில் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இதனால் ஷபாஸ் நதீமுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்தமுறையும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டார். இங்கிலாந்து அணியில் இலங்கை தொடரில் ஆடிய டாம் பெஸ், ஜாக் லீச் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டதால் மொயீன் அலி சேர்க்கப்படவில்லை. இதே போல் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கிட்டியதால் ஸ்டூவர்ட் பிராட் வெளியே உட்கார வேண்டியதாகி விட்டது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தயக்கமின்றி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய கேப்டன் கோலியும் டாஸில் ஜெயித்திருந்தால் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்திருப்பேன் என்று கூறினார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் ஆர்ப்பரிப்பு இன்றி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.

இங்கிலாந்தின் இன்னிங்சை ரோரி பர்ன்சும், டாம் சிப்லியும் தொடங்கினர். பும்ராவின் 2-வது ஓவரில் ரோரி பர்ன்சுக்கு கொஞ்சம் கடினமான கேட்ச் வாய்ப்பை அவரது லெக்சைடில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் தவற விட்டார். பொறுமையாக ஆடிய இந்த ஜோடியை பிரிக்க 7-வது ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை கேப்டன் கோலி கொண்டு வந்தார். ஆனால் உடனடியாக இவர்களை வெளியேற்ற முடியவில்லை.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த ஜோடியை ஒரு வழியாக அஸ்வின் பிரித்தார். ஸ்கோர் 63 ரன்களை எட்டிய போது ரோரி பர்ன்ஸ் (33 ரன், 60 பந்து) அவரது சுழற்பந்து வீச்சை ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ முறையில் அடிக்க முயற்சித்த போது, பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் பண்டிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. அடுத்து வந்த டேனியல் லாரன்ஸ் (0) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்திய மண்ணில் பும்ரா அறுவடை செய்த முதல் டெஸ்ட் விக்கெட் இதுவாகும். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக அடுத்தடுத்து இரு விக்கெட் வீழ்த்தியதால் இந்திய பவுலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதைத் தொடர்ந்து டாம் சிப்லியுடன், தனது 100-வது டெஸ்டில் ஆடும் கேப்டன் ஜோ ரூட் கைகோர்த்தார். நிதான பாணியை கையாண்ட இவர்கள், சுழல், வேகம் என்று இந்திய பவுலர்கள் இடைவிடாது கொடுத்த நெருக்கடியை சமாளித்தனர். ஒருகட்டத்தில் ஜோ ரூட் தொடர்ச்சியாக 25 பந்துகளில் ரன்னே எடுக்காமல் சற்று தடுமாற்றம் கண்டார். ஆனாலும் ஒரு பகுதி முழுவதும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் கை ஓங்கியது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் பெரிய அளவில் இல்லை. சுதாரித்துக் கொண்ட ஜோ ரூட் ரன்வேட்டையை துரிதப்படுத்தினார். அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட்டார். மறுமுனையில் தூண்போல் நிலைத்து நின்று தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய டாம் சிப்லி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். வாஷிங்டன் சுந்தர், ஷபாஷ் நதீமின் பந்து வீச்சில் அச்சுறுத்தும் அளவுக்கு துல்லியம் இல்லை. இதனால் அவர்களின் பந்து வீச்சை சிரமமின்றி சர்வசாதாரணமாக நொறுக்கினர். இதனால் ஆமை வேகத்தில் இருந்த ஸ்கோர் போக போக வேகம் பிடித்தது.

அபாரமாக ஆடிய ஜோ ரூட் 164 பந்துகளில் தனது 20-வது சதத்தை நிறைவு செய்தார். 100-வது டெஸ்டில் சதம் அடித்த 9-வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். 81-வது ஓவருக்கு பிறகு இந்தியா 2-வது புதிய பந்தை எடுத்தது. அதன் பிறகே ஜோ ரூட்-சிப்லி கூட்டணி உடைந்தது. அதுவும் கடைசி ஓவரில் டாம் சிப்லி (87 ரன், 286 பந்து, 12 பவுண்டரி) பும்ரா வீசிய யார்க்கர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சிப்லி டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலனின்றி வெளியேறினார். சிப்லி- ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் திரட்டி அணியை வலுப்படுத்தியது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் ஏமாற்றம் அளித்தது. சில பவுண்டரிகளை அனாவசியமாக விட்டுக்கொடுத்தனர். பவுலர்கள் எக்ஸ்டிராவில் 11 நோ-பால்களை வீசியது கவனிக்கத்தக்கது. 2-வது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ் (சி) பண்ட் (பி)

அஸ்வின் 33

டாம் சிப்லி எல்.பி.டபிள்யூ

(பி) பும்ரா 87

லாரன்ஸ் எல்.பி.டபிள்யூ (பி)

பும்ரா 0

ஜோ ரூட் (நாட்-அவுட்) 128

எக்ஸ்டிரா 15

மொத்தம் (89.3 ஓவர்களில்

3 விக்கெட்டுக்கு) 263

விக்கெட் வீழ்ச்சி: 1-63, 2-63, 3-263.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 15-3-27-0

பும்ரா 18.3-2-40-2

அஸ்வின் 24-2-68-1

ஷபாஸ் நதீம் 20-3-69-0

வாஷிங்டன் சுந்தர் 12-0-55-0

Next Story