தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி முன்னிலை


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி முன்னிலை
x
தினத்தந்தி 6 Feb 2021 11:01 PM GMT (Updated: 6 Feb 2021 11:01 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து இருந்தது. தெம்பா பவுமா 15 ரன்னுடனும், கேப்டன் குயின்டான் டி காக் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க வீரர்கள், பாகிஸ்தான் பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தெம்பா பவுமா 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நேற்றைய ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி 51 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 28 ரன்னுடனும், ஹசன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் நடக்கிறது. பாகிஸ்தான் அணி இதுவரை 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story