கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாலோ-ஆனை தவிர்க்க இந்திய அணி போராட்டம் - கோலி, ரஹானே ஏமாற்றம் + "||" + Indian team struggles to avoid Paulo in first Test against England - Goalie, Rahane disappointed

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாலோ-ஆனை தவிர்க்க இந்திய அணி போராட்டம் - கோலி, ரஹானே ஏமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாலோ-ஆனை தவிர்க்க இந்திய அணி போராட்டம் - கோலி, ரஹானே ஏமாற்றம்
சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி் பாலோ-ஆனை தவிர்க்க போராடுகிறது.
சென்னை,

இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்து ரன்மழை பொழிந்த இங்கிலாந்து அணி 2-வது நாள் 8 விக்கெட்டுக்கு 555 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து மொத்தம் 578 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டாம் பெஸ் 34 ரன்னிலும், ஆண்டர்சன் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜாக் லீச் 14 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (6 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சிக்கினார். நீண்ட நேரம் நிலைக்காத சுப்மான் கில்லும் (29 ரன், 28 பந்து, 5 பவுண்டரி) ஆர்ச்சரின் பந்துவீச்சில் வீழ்ந்தார். தொடக்க ஜோடியின் விக்கெட் இவ்வளவு எளிதில் கிடைக்கும் என்று இங்கிலாந்து வீரர்களே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட்கோலியும் கைகோர்த்தனர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (11 ரன், 48 பந்து) ஏமாற்றம் அளித்தார். அவர் டாம் பெஸ்சின் சுழலில் பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அருகில் நின்ற ஆலி போப்பிடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (1 ரன்) டாம் பெஸ்சின் ஓவரில் சில அடி இறங்கி வந்து பந்தை ‘கவர்’ திசையில் விரட்டிய போது ஜோ ரூட் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார். அப்போது இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட போதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து செயல்படாமல் சொதப்பி விட்டனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானத்தை காட்ட, பண்ட் கவலைப்படாமல் பட்டாசு போல் வெடித்தார். ஜாக் லீச்சின் சுழலில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து பறக்க விட்டார். தொடர்ந்து அவரது பந்து வீச்சை துவம்சம் செய்தார். எந்த பவுலரையும் பண்ட் விட்டுவைக்கவில்லை. அற்புதமாக ஆடிய இந்த ஜோடி புஜாராவின் துரதிர்ஷ்டவசமான ஒரு ஷாட்டால் பிரிய நேர்ந்தது.

அணியின் ஸ்கோர் 192 ரன்களாக உயர்ந்த போது புஜாரா (73 ரன், 143 பந்து, 11 பவுண்டரி) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது அவர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை பவுண்டரி நோக்கி ஓங்கி அடித்த போது பந்து அருகில் நின்ற பீல்டர் ஆலி போப்பின் தோள்பட்டையில் பட்டு தெறித்தது. அதை ரோரி பர்ன்ஸ் கேட்ச் செய்தார். சிறிது நேரத்தில் ரிஷாப் பண்ட் (91 ரன், 88 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகிப்போனார். இதனால் இந்திய அணியின் நிலைமை பரிதாபமானது.

இதன் பின்னர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் (68 பந்து, 5 பவுண்டரி), அஸ்வின் 8 ரன்னுடனும்(54 பந்து) களத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணி பாலோ-ஆனை தவிர்க்க மொத்தம் 378 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ஆபத்தை தவிர்க்க இன்னும் 121 ரன் எடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் கைவசம் 4 விக்கெட் மட்டுமே இருப்பதால் சிக்கலில் தவிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டெஸ்டை பொறுத்தவரை தற்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 578 ரன்

இந்தியா

ரோகித் சர்மா (சி) பட்லர்

(பி) ஆர்ச்சர் 6

சுப்மான் கில் (சி) ஆண்டர்சன்

(பி) ஆர்ச்சர் 29

புஜாரா (சி) ரோரி பர்ன்ஸ்

(பி) டாம் பெஸ் 73

விராட் கோலி (சி) போப்

(பி) டாம் பெஸ் 11

ரஹானே (சி) ரூட் (பி) டாம் பெஸ் 1

ரிஷாப் பண்ட் (சி) ஜாக் லீச்

(பி) டாம் பெஸ் 91

வாஷிங்டன் சுந்தர்

(நாட்-அவுட்) 33

அஸ்வின் (நாட்-அவுட்) 8

எக்ஸ்டிரா 5

மொத்தம் (74 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 257

விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-44, 3-71, 4-73, 5-192, 6-225

பந்துவீச்சு விவரம்

ஜேம்ஸ் ஆண்டர்சன் 11-3-34-0

ஜோப்ரா ஆர்ச்சர் 16-3-52-2

பென் ஸ்டோக்ஸ் 6-1-16-0

ஜாக் லீச் 17-2-94-0

டாம் பெஸ் 23-5-55-4

ஜோ ரூட் 1-0-1-0